விளக்கம் : 'உறையுள் இருந்த வேல்' என்பது ஞானம். பெருந்துறைப்பெருமான் ஞானத்தைத் தந்து பின் மறைந்ததை எண்ணி வருந்துவார், 'செய்த பிழையறியேன்' என்று ஏங்குகிறார். 'மார்பில் வேலைப் பாய்ச்சுவதற்கு யான் செய்த பிழை யாது? என்பது நயம். 'யான் யாதொரு தவமும் செய்யாதிருக்கவும், இறைவன்தான் குருவாகி வந்து எனக்கு ஞானத்தை அருளினான்' என்று அவனது பெருங்கருணைத் திறத்தைப் புகழ்ந்தபடியாம். இதனால், இறைவன் குருவாய்த் தோன்றி ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது. 3 முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் வருந்துயரந் தீர்க்கும் மருந்து. பதப்பொருள் : தென் - அழகிய, நல் - நல்ல, பெருந்துறையில் மேய - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய, பெருங்கருணையாளன் - பேரருளாளன், முன்னை வினை இரண்டும் - முற்பிறவியில் செய்த இரு வினைகளையும், வேர் அறுத்து - அடியோடு அறுத்து, முன் நின்றான் - எனக்கு எதிர்ப்பட்டு நின்றான்; பின்னைப் பிறப்பு - இனிவரும் பிறவியை, அறுக்கும் - நீக்குகின்ற, பேராளன் - பெருமையுடையவன், வரும் துயரம் - இப்பிறவியில் வரக்கூடிய துன்பத்தை, தீர்க்கும் - போக்குகின்ற, மருந்து - மருந்துமாவான். விளக்கம் : முன்னை வினையாவது சஞ்சிதம். பின்னைப் பிறப்பறுத்தலாவது, ஆகாமிய வினையை ஏறாதபடி செய்தல். வருந்துயரம் தீர்த்தலாவது, பிராரத்த வினை நுகரும் போது துன்பமில்லாதபடி செய்தல். பெருந்துறைப் பெருமான் இம்மூன்று வினைகளையும் நீக்குவானாதலின், 'துயரம் தீர்க்கும் மருந்து' என்றார். 'மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்' என்றார், திருநாவுக்கரசரும். இதனால், இறைவன் மூவகை வினைகளையும் நீக்குபவன் என்பது கூறப்பட்டது. 4 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற மறையோனும் மாலும்மால் கொள்ளும் - இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்நெஞ்சத் தின்று. பதப்பொருள் : அனைத்து உலகம் ஈன்ற - எல்லா உலகங்களையும் படைத்த, மறையோனும் - வேதியனுமாகிய பிரமனும், மாலும் - திருமாலும், மால் கொள்ளும் - அடி முடி காணாது மயங்கும், இறையோன் - இறைவனும், பெருந்துறையுள் -
|