என்றும் அருள் நாத ஒலி, அச்சொல்லிற்கு அப்பாற்பட்டது என்றும் அறிக. செவியினால் கேட்கப்படும் ஏனைய ஒலியின் பின்னர், ஒளியும் விளங்கித் தோன்றும் என்பார், 'என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழும்' என்றார். அஃதாவது, உள்ளத்தில் தோன்றிய சிவஞானம் பெருகி வரும் என்றதாம், 'பராபரம்' என்றது, அதன் பயனைக் குறிப்பதால், ஆகுபெயர். 'வந்த பராபரத்தின் பயன்' என்றதற்குப் 'பராபரம் வந்ததன் பயன்' என்பது கருத்தென்க. அப்பயனாவது, பிறப்பு அறுதல். 'நன்னுதலார் மயல் - உவமையாகுபெயர். 'கட்டழகு உடைய காளையரைக் கண்டால் கைவளை சோர நிற்கும் காதல் மகளிரைப் போல, இறைவனிடத்து எமக்கு ஆராக் காதல் பிறக்கும்' என்றபடி. இனி, காமுகருக்கு நன்னுதலார்மேல் உண்டாகும் காதல் போன்ற காதல் என்றும் கூறலாம். 'இப்பொருள்' என்றதற்கு 'இப்பொருள் என்னும் உணர்வு' எனப் பொருள் கொள்க. இதனால், இறைவன் எழுந்தருளினால் அடியார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது. 7 சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே சாதிவி டாத குணங்கள்நம்மோடு சலித்திடு மாகாதே அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடு மாகாதே ஆசையெ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை யாகாதே செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீரடி யார்கள் சிவானு பவங்கள் தெரிந்திடு மாகாதே எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே. பதப்பொருள் : ஈறு அறியா - முடிவு அறியப்படாத, மறையோன் - அந்தணனாகிய இறைவன், எனன ஆள - என்னை ஆளும் பொருட்டு, எழுந்தருளப் பெறில் - எழுந்தருளப் பெற்றால், சங்கு திரண்டு - பல சங்குகள் ஒன்றுசேர்ந்து, முரன்று எழும் ஓசை - முழங்கினால் எழுகின்ற ஓசையில் விளையும் இன்பம் போன்றதோர் இன்பம், தழைப்பன ஆகாதே - மிகுதிப்படுதல் ஆகாது போகுமோ? சாதி விடாத குணங்கள் - பிறந்த இனம் பற்றி விடாது வருகிற தன்மைகள், நம்மோடு - நம்மிடமிருந்து, சலித்திடும் ஆகாதே - நீங்குதலும் ஆகாது போகுமோ? அங்கு - அப்பொழுது, இது நன்று இது நன்று எனும் மாயை - இது நல்லது இது நல்லது என்னும் மயக்கம், அடங்கிடும் ஆகாதே - தணிதல் ஆகாது போகுமோ? ஆசை எலாம் - ஆசை முழுவதும், அடியார் அடியோம் எனும் - யாம் இறைவன் அடியார்க்கு அடியோம் என்னும், அத்தனை ஆகாதே - அவ்வளவே ஆகாது போகுமோ? செங்கயல் - சிவந்த கயல் மீன் போன்ற, ஒண்கண் - ஒளி மிக்க கண்களையுடைய, மடந்தையர்
|