சிந்தை - பெண்களது மனமானது, திளைப்பன ஆகாதே - நன்கு விளங்குதல் ஆகாது போகுமோ? சீர் அடியார்கள் - சிறப்பினையுடைய அடியார்களது, சிவானுபவங்கள் - சிவானுபவங்களை, தெரிந்திடும் ஆகாதே - உணர்தல் ஆகாது போகுமோ? எங்கும் நிறைந்து - எவ்விடத்தும் நிறைந்து, அமுது ஊறு பரஞ்சுடல் - பேரின்பத்தைப் பொழிகின்ற மேலான சோதியை, எய்துவது ஆகாதே - அடைதல் ஆகாது போகுமோ? விளக்கம் : ஆதியும் அந்தமுமில்லா இறைவன் எழுந்தருளப் பெற்றால், இன்பம் மிகும் என்பார், 'சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை, தழைப்பன ஆகாதே?' என்றார். வலம்புரி முதலிய சங்குகளின் ஓசை மிக்க இனிமையுடையன என்க. சாதி விடாத குணங்களாவன, தம்மின் இழிந்தாரை நோக்கிப் பெருமைப்படுதலும் உயர்ந்தாரை நோக்கிச் சிறுமையுறுதலும் முதலியன. உடற்பற்றை விட்டமையால் அடியார்கறுக்குச் சாதிபற்றி வரும் தன்மைகள் இரா என்க. இனி அடியார்கள் விரும்புவது அடியார்க்கு அடியாராகும் பேறேயாகலின், 'ஆசையெலாம் அடியாரடியோம் எனும் அத்தனை யாகாதே?' என்றார். திளைத்தல் - நன்கு உணரப்படுதல். மடந்தையர் சிந்தையாவது, ஞானநெறியிற்போகவிடாது, உலகியலிலே அழுந்தச் செய்வதாம். அஃது இறைவன் திருக்காட்சிக்குப் பின்னர் இனிது விளங்கிவிடுமாகையால், 'மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே!' என்றார் என்க. சிவானுபவங்கள் என்பது இதுகாறும் கூறியவையாம். இதனால், இறைவன் எழுந்தருளினால் ஆசை அறும் என்பது கூறப்பட்டது. 8 திருச்சிற்றம்பலம்
|