இதனால், இறைவன் திருவடியே துன்பக் கடலுக்குக் கரை என்பது கூறப்பட்டது. 1 என்னால் அறியாப் பதந்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழைய அடிய ரொடுங்கூடா தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. பதப்பொருள் : என் நாயகமே - என் தலைவனே, என்னால் அறியா - என் அறிவால் அறிய முடியாத, பதம் தந்தாய் - பதவியினை எனக்கு நீ அளித்தாய்; யான் அது அறியாதே கெட்டேன் - நான் அதன் பெருமையினை அறியாமலே வீணானேன்; உன்னால் ஒன்றும் குறைவில்லை - உன் மேல் ஒரு சிறிதும் குறைவில்லை; உடையாய் - எல்லாவற்றையும் உடையவனே, அடிமைக்கு ஆர் என்பேன் - உன் அடியவனாயிருத்தற்கு நான் என்ன தகுதியுடையவன் என்று சொல்வேன்? பல்நாள் - பல நாளும், உன்னைப் பணிந்து ஏத்தும் - உன்னை வணங்கித் துதிக்கின்ற, பழைய அடியரொடும் கூடாது - பழமையான அடியார்களோடும் சேராமல், பிற்பட்டு - பின்னிட்டு, இங்கு - இவ்விடத்தில், நோய்க்கு விருந்தாய் - பிணிக்கு விருந்தாகி, இருந்தேன் - இவ்வுலகில் இருந்துவிட்டேன். விளக்கம் : அறியாப் பதமாவது, அறிவினால் அறிய முடியாத அருள் நிலை. 'அதனை விடாது பற்றிக்கொள்ளமாட்டேனாயினேன்' என்பார், 'கெட்டேன்' என்றார். எனவே, இன்பத்தைப் பெறுவதற்குரிய சாதனமாகிய அடியார் கூட்டத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தவாறாம். இதனால், அடியார் கூட்டம் இன்பத்தை நல்கும் என்பது கூறப்பட்டது. 2 சீல மின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.
|