பக்கம் எண் :

திருவாசகம்
68


மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த

95. அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க!
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க!
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க!
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க!

100. சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க!
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க!
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க!
பேரமைத் தோளி காதலன் வாழ்க!
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க!

105. காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க!
நச்சர வாட்டிய நம்பன் போற்றி!
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி! நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

110. நிற்பன நிறீஇச்
சொற்பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத் துணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண்முதற் புலனால் காட்சியு மில்லோன்;
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்;

115. பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி!

120. அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி!
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்;
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்