125. மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும், முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும், ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத் துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும், 130. மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும், இத்தந் திரந்திற் காண்டும்என் றிருந்தோர்க் கத்தந் திரந்தி னவ்வயி னொளித்தும், முனிவற நோக்கி நனிவரக் கவ்வி ஆணெணத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 135. வாணுதற் பெண்ணென ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த வொளித்தும், ஒன்றுண் டில்லை என்றறி வொளித்தும், 140. 'பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்; ஆர்மின் ஆர்மின்! நாண்மலர்ப் பிணையலின் தாள்தளை யிடுமின்! சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்! 145. பற்றுமின்! என்றவர் பற்றுமுற் றொளித்தும், தன்னே ரில்லோன் றானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி அறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் 150. உளையா அன்பென் புருக வோலமிட் டலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும் 155. கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்; ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின் வீழ்வித் தாங்கன்
|