திருவண்டப் பகுதி ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்னும் தொடக்கத்தை யுடைய பாட்டு ஆதலின், ‘திருவண்டப் பகுதி’ எனப்பட்டது. இது சிவனது தூல சூக்குமத்தை வியந்தது. அஃதாவது, சிவபெருமானது பெருமையும் நுட்பமுமாகிய வியாபக நிலையை வியந்தருளியது என்பதாம். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன 5 இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் பதப்பொருள் : தெரியின் - ஆராயுமிடத்து, அண்டப் பகுதியின் - அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உண்டைப் பிறக்கம் - உருண்டை வடிவின் விளக்கமும், அளப்பு அருந் தன்மை - அளத்தற்கரி தாகிய தன்மையும், வளப்பெருங்காட்சி - வளமான பெருங்காட்சியும், ஒன்றனுக்கு ஒன்று - ஒன்றுக்கொன்று, நின்ற எழில் பகரின் - தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து, நூற்று ஒரு கோடியின் - நூற்றொரு கோடியினும், மேற்பட விரிந்தன - மேற்பட்டு விரிந்துள்ளன; (அவை அனைத்தும்) இல்நுழை கதிரின் - வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில், துன் அணுப் புரைய - நெருங்கிய அணுக்களை நிகர்க்க, சிறிய ஆக - சிறியனவாகும்படி, பெரியோன் - பெரியவனாயிருப்பவன். விளக்கம் : அண்டம் முட்டை வடிவானது; அதனால் அப்பெயர் கொண்டது. பூவுலகம், மேல் உலகம் ஏழு, கீழ் உலகம் ஏழு, அவற்றிற்குமேல் அண்டச்சுவர் ஆகிய எல்லாம் ஓர் அண்டமாகும். இப்படி அளவற்ற அண்டங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இந்நாளில்கூடப் பூவுலகம் ஒன்றை மட்டுமே நன்கு காண முடிகிறது. ஆதலால், அண்டங்களின் அளவை முழுதும் காண முடியாதாகையால், ‘அளப்பருந்தன்மை’ என்றார். அடுத்து, அண்டத்திலுள்ள கோளங்களின் தோற்றங்களை ஆராயப்புகின், அவை குறையாத வனப்புடையனவாகக் காணப்படுதலின், ‘வளப்பெருங்காட்சி’ என்றார். எனினும், இவ்வண்டங்க ளெல்லாம் இறைவனது பெருமைக்கு முன், வீட்டில் நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் என்று இறைவனது பெருமை கூறுவார். ‘இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறியவாகப் பெரியோன்’ என்றார். இக்கருத்துப்பற்றியே பின்னர் வந்த பரஞ்சோதி முனிவர், "அண்டங்களெல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதா
|