யினானும்" என்று திருவிளையாடற் புராணத்தில் இறைவனது பெருமையை வியந்து கூறினார். வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும் 10. சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன் பதப்பொருள் : வேதியன் தொகையொடு - பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதியோடு, மாலவன் மிகுதியும் - திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும், தோற்றமும் சிறப்பும் - உலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை, ஈற்றொடு புணரிய - இறுதியடையச் செய்த, மாபேர் ஊழியும் - மிகப் பெரிய ஊழிக்காலமும், நீக்கமும் - அவ்வூழியின் நீக்கமும், நிலையும் - அந்நீக்கத்தின்பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும், சூக்கமொடு தூலத்து - பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற, சூறை மாருதத்து எறியது வளியில்- சூறைக் காற்றாகிய வீசும் வளியில் அகப்பட்ட பொருள் போல, கொட்க - சுழல, பெயர்க்கும் - அவற்றை நிலை பெயர்க்கின்ற, குழகன் - அழகன். விளக்கம் : பிரம விட்டுணுக்குப் பரிவார தேவர் பலர் உளர் ஆதலின், ‘வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்’ என்றார். தலைவர்களாகிய பிரமன் திருமால் முதலியவர்களும் அழிவராலின், ‘ஈற்றொடு புணரிய மாப்பேரூழி’ என்றார். "நூறு கோடி பிரமர்கள் நுங்கினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே கூறுகங் கைமணல் எண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே" என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசு நாயனார். திருமால் முதலிய தேவர்கள், ஊழிக்காலம், உலகம் இவை அனைத்தையும் ஒடுக்கும் ஆற்றல் உடையவன் இறைவன் என்பதை விளக்க, "சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்கும் குழகன்" என்றார். அந்நிலையிலும் அவன் அழகோடு பொலிகிறான் என்பார். ‘குழகன்’ என்றார். எறி - வீச்சு. இதனால், இறைவனது பெருமை கூறப்பட்டது. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
|