பக்கம் எண் :

திருவாசகம்
73


15. கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாடொறும்

20. அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்

25. நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்
றெனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று

பதப்பொருள் : முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் - எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக்கின்ற பழையவன், படைத்தவை காப்போன் காக்கும் கடவுள் - படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள், காப்பவை கரப்போன் - காக்கப்பட்ட பொருள்களை அழிப்பவன், கரப்பவை கருதாக் கருத்துடை கடவுள் - அழிக்கப்பட்டவற்றை நினையாத கருத்தையுடைய கடவுள், திருத்தகும் - சிறப்புப் பொருந்திய, அறுவகைச் சமயத்து - அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, அறுவகையோர்க்கும் - ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும், வீடுபேறாய் நின்ற - முத்திப்பேறாய் நின்ற, விண்ணோர் பகுதி கீடம்புரையும் - தேவர் பகுதிகள் புழுக்களை ஒக்க நிற்கின்ற, கிழவோன் - பெரியோன், நாள்தொறும் - தினந்தோறும், அருக்கனில் சோதி அமைத்தோன் - சூரியனில் ஒளியை அமைத்தவன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் - அழகு பொருந்திய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன், திண்திறல் தீயின் வெம்மை செய்தோன் - வலிய வெற்றியை யுடைய நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் - உண்மையாகிய ஆகாயத்தில் வியாபிக்குந் தன்மையை வைத்தவன், மேதகு காலின் ஊக்கம் கண்டோன் - மேன்மை பொருந்திய காற்றில் அசைவை அமைத்தவன், நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் - நிழல் பொருந்திய நீரினிடத்து இனிய சுவையை வைத்தவன், வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் - வெளிப்படையாக மண்ணினிடத்து வலிமையை அமைத்தவன், என்று என்று - இவ்வாறே எந்நாளிலும், எனைப்பல கோடி எனைப்பல பிறவும் - எவ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும், அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் - அவ்வவற்றின் தன்மையை அவ்வவ் பொருள்களில் அமைத்து வைத்தவன், அஃது அன்று - அதுவன்றி.