பக்கம் எண் :

திருவாசகம்
74


விளக்கம் : பிரமன் திருமால் முதலிய கடவுளர்க்கு முறையே படைக்கும் ஆற்றலையும் காக்கும் ஆற்றலையும் அளித்து, அழிக்கும் ஆற்றலை இறைவன் தானே கொண்டனன். உலகத்தை எவன் அழிக்கிறானோ, அவன் தான் மீளவும் உற்பத்தியைச் செய்ய முடியும். ஆகையால், எல்லாவற்றையும் செய்பவன் சிவபெருமானே என்பது விளங்குகிறது. இதுபற்றியே, ‘படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை, காப்போற் காக்கும் கடவுள்’ என்றார். இவ்வளவு செயல் புரிந்தும் தான் விகாரமின்றி இருக்கிறான் என்பார். ‘கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்’ என்றார்.

இறைவனை நோக்க, அறுவகைச் சயமத்திற்கும் முதலாகிய தெய்வங்கள் புழுக்களை ஒக்கும் என்ற கருத்தை விளக்க, ‘விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன்’ என்றார்.

நிலம், நீர், தீ, காற்று, விண் என்ற ஐம்பெரும்பூதங்களுக்கும் அவற்றுக்குரிய ஆற்றல்களை அளிப்பதோடு, ஒளிப்பொருள்களாகிய சூரியன் சந்திரன் முதலியவற்றுக்கும் அவற்றுக்குரிய ஆற்றலாகிய ஒளியை அளித்தான் இறைவன் என்பது பின் குறிப்பிடப்பட்டது. இவற்றில் ஒவ்வொரு பொருளுக்கும் அடிகள் கொடுத்திருக்கும் அடைமொழி சிந்தித்து வியக்கற்பாலது.

இறைவனது பெருஞ்செயல் விளக்கப்பட்டது. அறுவகைச் சமயங்கள்: உலகாயதம், பௌத்தம், சமணம், மீமாஞ்சை, மாயவாதம், பாஞ்சராத்திரம் என்னும் ஆறுமாம்.

முன்னோன் காண்க முழுதோன் காண்க

30. தன்னே ரில்லோன் தானே காண்க
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்

35. இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க

40. சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க