பக்கம் எண் :

திருவாசகம்
75


45. அணுத்தருந் தன்மையி லையோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய வரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க

50. மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
கற்பகம் இறுதியும் கண்டோன் காண்க

55. யாவரும் பெறவுறும் ஈசன் காண்க
தேவரு மறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க

60. கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க

65. அவளும் தானும் உடனே காண்க

பதப்பொருள் : இத்தொடர்களில் ‘காண்க’ என்பன வெல்லாம் அசைநிலைகள். முன்னோன் - எப்பொருட்கும் முன்னே உள்ளவன், முழுதோன் - முழுதும் நிறைந்தவன், தன் நேர் இல்லோன் - தனக்கு நிகர் இல்லாதவன், தொல் - பழைமையாகிய, ஏன எயிறு அணிந்தோன் - பன்றியின் பல்லை அணிந்தவன், கானம் - காட்டில் வாழ்கின்ற, புலி உரி - புலியினது தோலை, அரையோன் - அரையில் உடுத்தவன், நீற்றோன் - திருவெண்ணீற்றை அணிந்தவன், நினைதொறும் நினைதொறும் - அவனது பிரிவை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும், ஆற்றேன் - பொறுக்க மாட்டேன், அந்தோ கெடுவேன் - (அவன் மீண்டும் அருள் செய்யாவிடின்) ஐயோ நான் கெட்டொழிவேன், இன் இசை வீணையில் இசைந்தோன் - இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல உயிர்களில் நிறைந்திருப்பவன், அன்னது ஒன்று - அப்படிப்பட்ட தாகிய வீணை இசை ஒன்றை, அவ்வயின் அறிந்தோன் - அவ்விடத்து அறிந்தவன், பரமன் - மேலோன், பழையோன் - பழையவன், பிரமன் மால் காணாப் பெரியோன் - பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன், அற்புதன் - வியத்தகு தன்மைகள் உடையவன், அநேகன் - எல்லாப் பொருளுமாயிருப்பவன், சொல் பதம் கடந்த - சொல்லின் நிலையைக் கடந்த, தொல்லோன் -