பழையோன், சித்தமும் செல்லா - மனமும் சென்று பற்றாத, சேட்சியன் - தூரத்திலிருப்பவன், பத்தி வலையில் படுவோன் - பத்தியாகிய வலையி்ல் அகப்படுவோன், ஒருவன் என்னும் ஒருவன் - ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன், விரிபொழில் முழுதாய் விரிந்தோன் - பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன், அணுத்தரும் தன்மையில் - அணுப்போன்ற தன்மையினையுடைய, ஐயோன் - நுண்ணியவன், இணைப்பு அரும்பெருமையில் - ஒப்புச் சொல்லுதற்கு அரிய பெருமையையுடைய, ஈசன் - தலைவன், அரியதில் அரிய - அரிய பொருள் யாதினும் அரிய பொருளாகிய, அரியோன் - அரியவன், மருவி - பொருந்தி, எப்பொருளும் - எல்லாப் பொருளையும், வளர்ப்போன் - காப்பவன், நூல் உணர்வு உணரா - நூலறிவால் உணரப்படாத, நுண்ணியோன் - நுட்பம் உடையன், மேலொடு கீழாய் விரிந்தோன் - மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன், அந்தமும் ஆதியும் அகன்றோன் - முடிவும் முதலும் நீங்கினவன், பந்தமும் வீடும் படைப்போன் - உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும் வீடுபேறும் உண்டாக்குவோன், நிற்பதும் செல்வதும் ஆனோன் - அசையாப் பொருளும் அசையும் பொருளும் ஆனவன், கற்பமும் இறுதியும் கண்டோன் - கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன், யாவரும் பெற உறும் - எல்லாரும் அடையும்பொருட்டு எழுந்தருளுகின்ற, ஈசன் - தலைவன், தேவரும் அறியாச் சிவன் - தேவரும் அறியவொண்ணாத சிவபெருமான், பெண் ஆண் அலி என்னும் பெற்றியன் - பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன், யானும் கண்ணால் கண்டேன் - அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன், அருள் நனி சுரக்கும் - அருள் மிகவும் சுரக்கின்ற, அமுது - அமிர்தம், கருணையின் பெருமை கண்டேன் - அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன், சேவடி புவனியில் தீண்டினன் - அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான், சிவன் என -அவனைச் சிவபிரான் என்று, யானும் தேறினன் - நானும் தெளிந்து கொண்டேன், அவன் எனை ஆட்கொண்டு அருளினன் - அவன் என்னை அடிமை கொண்டருளினன், குவளைக்கண்ணி கூறன் - நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன், அவளும் தானும் உடனே -அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன். விளக்கம் : இறைவன் ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளானவன்’ (திருவெம்பாவை) : எப்பொருளுமுடையவன்; ‘தனக்குவமை இல்லாதவன்’ (திருக்குறள்); எனினும், தன் எளிமையைக் காட்டப் பன்றியின் பல்லை அணியாகக் கொண்டான் என்பார், ‘ஏனத்தொல்லெயிறு அணிந்தோன்’ என்றார்.
|