பக்கம் எண் :

திருவாசகம்
77


ஏனத் தொல்லெயிறு அணிந்தது : முன்னொரு நாள் இரணியாக்கன் என்னும் அரக்கன் இந்நிலவுலகைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு கீழுலகத்தில் மறைந்து போயினான். திருமால் பன்றி வடிவமெடுத்துச் சென்று அவ்வரக்கனைக் கொன்று பூமியை மீட்டார்; அப்பன்றியுருவில் பின்னர் வெறி கொண்டு உலகத்தைத் துன்புறுத்தலானார். தேவர்களின் வேண்டு கோளுக்கு இரங்கி இறைவன் அப்பன்றியை அழித்து, அதன் பல்லை அணியாகக் கொண்டான். (சிவரகசிய காண்டம்). ஆகவே, இறைவனுக்குமேல் எக்கடவுளரும் இல்லை என்பது, ‘ஏனத்தொல்லெயிறு’ அணிந்தமையால்' விளங்குகிறது.

புலியுரி உடுத்தது : தாருகா வனத்து முனிவர்கள், தங்கள் பத்தினிமார்களைச் சிவபெருமான் பிட்சாடனக் கோலத்துடன் வந்து மயக்கியதை அறிந்து, அவனை அழிக்க வேள்வியில் புலியை உண்டாக்கி ஏவினார்கள். ஆனால், இறைவன் அப்புலியைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக உடுத்தான். இதனால், இறைவன் இல்லையென்பார்க்கு இறையுண்மை காட்டினார். (காந்தபுராணம் - ததீசியுத்தரப் படலம்)

‘இறைவன் உலகப் பொருள்களையெல்லாம் பேரூழிக் காலத்தில் அழித்து நீறாக்க, அவை அப்போதும் பற்றுக்கோடு வேறொன்றின்றி இறைவனையே சார்ந்திருக்கும்,’ என்பார். "நீற்றோன் காண்க" என்றார். திருநீற்றை நெருப்பிலிட்டால், அது அழியாது, அதனால், அது பெருமையுடையது எனத் திருமுறை போற்றுகிறது.

இவ்வளவு பெருமையுடைய இறைவனைக் கண்டும் பிரிந்திருக்க நேர்கிறதே என்று நினைத்து ‘ஆற்றேன் கெட்டேன்’ என்கிறார் அடிகள்.

வீணை இசை கேட்டது : முன்னொரு நாள் இறைவன் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான் இராவணன். அப்போது இறைவனது திருவடி விரலால் நெருக்கப் பெற்றுத் துன்புற்றான். பின்னர், இராவணன் தன் அங்கத்தைக் கொண்டு வீணை செய்து சாமகானம் பாடினான். இசை வடிவமான இறைவன் இராவணனின் அங்கத்தாலாகிய வீணையிலிருந்து எழுந்த இன்னிசையை அறிந்து இரங்கி அருளினான். இவ்வரலாற்றை நினைவுபடுத்த, ‘அன்னதொன்று (வீணை இசை) அவ்வயின் அறிந்தோன்’ என்றார். நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய பொருள்கள் எல்லாம் இறைவனுக்குரிய வடிவங்களாதலின், ‘அநேகன்’ என்றார்.

இறைவன் வாக்குக்கும் அப்பாற்பட்டவன்; மனத்தினாலும் எட்ட முடியாதவன்; ஆதலின், ‘சித்தமும் செல்லாச் சேட்சியன்’