என்றார். இவ்வாறாயினும், பக்தி வலையிற்படுவோன். வேடன் வலையை வீசினால் பறவைகள் தாமே வந்து அகப்படுவது போல, அன்பர்கள் பத்தியாகிய வலையை வீசினால் இறைவனாகிய பறவை தானே வந்து அகப்பட்டுக் கொள்ளும் என்பார். ‘பத்தி வலையிற் படுவோன்’ என்றார். இறைவனைவிட அரிய பொருள் வேறு இல்லையென்பார், ‘அரியதில் அரிய அரியோன்’ என்று மும்முறை அடுக்கிக் கூறினார். ஆனால், கருணை காரணமாக எல்லாப் பொருளோடும் கலந்து நடத்துகின்றானாதலின், ‘மருவி எப்பொருளும் வளர்ப்போன்’ என்றார். இறைவன், நூல்களை ஆராயும் ஆராய்ச்சி அறிவால் அறியப்படாது, அனுபவத்திலே அறியப்படுபவன் ஆதலின், ‘நூலுணர் வுணரா நுண்ணியோன்’ என்றார். உயிர்களைப் பாசப்பற்று உடைய காலத்தில் பிறப்பு இறப்புகளில் செலுத்துதல் பந்தமும், அப்பற்று நீங்குவதற்கு உரிய பக்குவ காலத்தில் ஞானம் வாயிலாக வீடு அடையச் செய்தல் வீடும் ஆகையால், ‘பந்தமும் வீடும் படைப்போன்’ என்றார். இறைவன், எல்லாரையும் ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையே வடிவினன் ஆகையால், ‘யாவரும் பெற உறும் ஈசன்’ என்றார். உலகம் பெண் ஆண் அலி என்னும் மூன்று கூறாயிருப்பதால், அவையனைத்திலும் கலந்துள்ள இறைவனை, ‘பெண் ஆண் அலியெனும் பெற்றியன்’ என்றார். இறைவன் தம்பொருட்டு பூமியின்மீது வந்து அம்மையப்பராகக் காட்சி கொடுத்து ஆட்கொண்டருளினான் என்பார். ‘அவன்எனை ஆட்கொண் டருளினன்’ என்றார். அது மாயக் காட்சியன்று; உண்மையே. அவர்தாம் சிவபெருமான் என்று நான் தேறினேன்’ என்று அடிகள், தமக்கு இறைவன் அருளிச்செய்த பெருமையை வியந்து கூறுகிறார். சிவமும் சத்தியும், குணகுணித் தன்மையால் இரண்டாய் நிற்பதல்லது, பொருளால் வேறல்ல என்பார். ‘அவளும் தானும் உடனே’ என்றார். சத்தி அம்மையும், சிவம் அப்பனுமாய் இருத்தலை அம்மையப்பர் வடிவம் நன்கு விளக்கும். ‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்பது திருக்களிற்றுப்படியார். பரமா னந்தப் பழங்கட லதுவே கருமா முகிலின் தோன்றித் திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
|