பக்கம் எண் :

திருவாசகம்
80


செறிந்து தோன்ற, மாப்பெருங்கருணையின் முரசு எறிந்து முழங்கி - இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய, பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட - பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர் போல விளங்க, எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள - குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள, செஞ்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட - நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ, கேதக்குட்டம் கையற - துன்பமாகிய குளம் கரையழிய, வரையுற ஓங்கி - மலைச்சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும், இருமுச் சமயத்து ஒரு பேய்த்தேரினை - ஆறு சமயங்களாகிய கானல் நீரினை, நீர் நசைதர வரும் - நீர் வேட்கையுண்டாக வந்த, நெடுங்கண் மான் கணம் - நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற சிற்றறிவுயிர்கள், தவப் பெருவாயிடைப் பருகி - தமது அகன்ற பெருவாயினால் பருகியும், தளர்வொடும் அவப்பெருந்தாபம் நீங்காது அசைந்தன - நடந்த தளர்ச்சியும் மிகுந்த தாகமும் நீங்கப்பெறாது உழன்றன, ஆயிடை - அத்தருணத்தில், வானப் பேர்யாற்று அகவயின் - அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே, பாய்ந்து எழுந்து - புகுந்து பெருகி, இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து - பேரின்பமாகிய பெரிய சுழலினை உண்டாக்கி மெய்யாகிய மணிகளை வாரிக்கொண்டு, எம் பந்த மாக்கரை பொருது அலைத்து இடித்து - எமது பாசக் கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து, ஊழ் ஊழ் ஓங்கிய - முறைமுறையாய் வளர்ந்து வந்த, நங்கள் - எங்களுடைய, இருவினை மாமரம் - நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை, வேர் பறித்து எழுந்து - வேரோடு பிடுங்கி மிகுந்து வந்த, உருவ அருள் நீர் ஓட்டா - அழகுமிக்க அருள்வெள்ளத்தைச் செலுத்தி, தொண்ட உழவர் - தொண்டராகிய உழவர், அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி - கடத்தற்கரிய எல்லையையுடைய சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி, மட்டு அவிழ் வெறிமலர் குளவாய் கோலி - தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற இதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினையமைத்து, நிறை அகில் மாப்புகைக் கரை சேர் - பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற்புகை சேரும் வரம்பினையுடைய, வண்டுடைக் குளத்தின் - ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே, மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி - அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து, அருச்சனை வயலுள் - வழிபாடு என்னும் வயலுள், அன்பு வித்து இட்டு - அன்பு என்னும் வித்தை விதைத்து, ஆரத்தந்த - சிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய, அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க - உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க.