விளக்கம் : பெரிய கடலே மேகமாக வடிவெடுத்து மலை மீதேறி மின்னலை வீசுகிறது. பாம்புகள் ஓடி ஒளிகின்றன. கோடையின் வெப்பம் தணிகிறது. அழகான தோன்றிச்செடிகள் உண்டாகின்றன. பட்டுப்போன்ற தம்பலப் பூச்சிகள் எங்கணும் நிறைந்து விளங்குகின்றன. இனிய இடி ஓசை கேட்கிறது. காந்தள் மலர் விரிகின்றது. மழை சிறு துளியாய் விழுந்து, பெரிய வெள்ளமாய்த் திக்கெங்கும் பரவி, சிறு குட்டைகளை யெல்லாம் நிரம்பச்செய்து, மலைபோல ஏக உருவாய்க் கிடக்கிறது. ஆனால், மான் கூட்டங்கள் கானல் நீரினை அடைந்து தாக விடாய் தீராமல் துன்பமடை கின்றன. அத்தருணத்தில் பெரிய வெள்ளமானது இரு கரைகளையும் இடித்து மரங்களைப் பிடுங்கிக்கொண்டு வேகமாக வருகிறது. பயிர்த்தொழில் செய்யும் உழவர் மலைச்சந்திலே நீர்த்தேக்கங்களைக் கட்டிச் சிறு குளங்களுக்குப் பாய்கால் அமைத்து நீர் நிறையும்படி செய்கிறார்கள். பின்னர், வயலிலே விதை விதைத்துப் பயனைப் பெறுகிறார்கள். இது மழைக்காட்சி. இனி, இறைக்காட்சி வருகிறது. பேரின்பமே ஆசிரிய உருக் கொண்டு திருப்பெருந்துறையில் அருள் புரிந்தது. ஐம்பொறிகளின் வழியே செல்லும் பற்றுகள் ஒழிந்தன. பிறவி துன்பமுடையது என்ற அறிவு தோன்றிய பின் பிறவியில் வெறுப்பு உண்டாகியது. இறைவனின் கருணை தோன்றுகிறது. கைகள் கூம்புகின்றன. கொஞ்சம்கொஞ்சமாக அருள் உண்டாகிப் பெருகுகிறது. ஆனால், சமயவாதிகள் சிறு நெறிகளில் சென்று கதி கூடாமல் மலைகின்றனர். அப்பொழுது அருளானது பொங்கி உண்மையைத் தெளியக் காட்டிப் பாசங்களைப் போக்கி இரு வினைகளை அறுத்து எறிகிறது. தொண்டர்கள் சாந்தமாக அமைந்து வாய்மையால் அகத்தைத் தூய்மை செய்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, ஓங்காரமாய் நின்ற மெய்யனை உள்ளத்திலே கண்டு, அன்பினால் வழிபாடாற்றிப் பேரின்பத்தைத் துய்க்கிறார்கள். அடிகள் இவ்வகையில் இறைவனை மேகமாக வருணிக்கிறார். தோன்றி - கார்காலத்தில் பூக்கும் ஒரு வகைச் செடி. இதன் பூச் சிவப்பு நிறமானது. கோபம் - தம்பலப்பூச்சி. இது பட்டுப் போன்ற மெல்லிய உடம்பும் சிவந்த நிறமும் உடையது. இதுவும் கார்காலத்தில் தோன்றுவது. மழைத்தொடக்கத்தில் உண்டாகி அழிந்தொழியும் பூச்சிக்குப் பிறவி உவமிக்கப்பட்டது. காந்தள் - கை போன்றுள்ள மலர். கேதம் - துன்பம். குட்டம் - சிறு குளம். கானல் நீர் தாகவிடாய் தணிக்காதது போல, அறுவகைச் சமயக் கொள்கைகளும் ஞான தாகத்தைத் தணியா என்பார், ‘இருமுச் சமயத்தை ஒரு பேய்த்தேர்’ என்றார். ஓட்டா - ஓட்டி, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சந்து - கணவாய். பெண்கள் நீரில் மூழ்கிக் கரையில் தங்கி அகில் புகைகொண்டு தலைமுடி
|