உலர்த்தும் மரபைக் காட்டுவார், ‘நிறை அகில் மாப்புகை கரை சேர்’ என்றார். தாமரை மலரைச் சுற்றி வண்டுகள் ஒலிப்பதைக் காட்டுவார், ‘வண்டுடைக் குளம்’ என்றார். இதனால், இறைவனது திருவருட்பெருக்கம் கூறப்பட்டது. கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க 100. சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேரமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க 105. காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க பதப்பொருள் : கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க - கரிய படமுள்ள பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க, அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க - அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க, அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க - பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க, நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க - நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க, சூழ் இருந்துன்பம் துடைப்போன் வாழ்க - எம்மை வளைத்துக்கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க, எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க - தன்னை அடைந்தவர்க்கு அரிய அமுதத்தைத் தருவோன் வாழ்க, கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க - மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க, பேர் அமைத்தோளி காதலன் வாழ்க - பெரிய மூங்கில் போலும் தோள்களையுடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க, ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க - தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க, காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க - அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க. விளக்கம் : பணம் - படம். இங்குப் படத்தையுடைய பாம்புக்கு ஆயிற்று. கச்சை - அரையில் கட்டிக்கொள்வது. நித்தலும் என்பது நிச்சலும் எனப் போலியாயிற்று. இறைவன் பரவெளியில் ஆடும் கூத்தைக் காண வல்லவள் அம்மையாகிய உமாதேவியாதலால், ‘கூரிருட் கூத்தொடு குனிப்போன்’ என்பதையடுத்து, ‘பேரமைத் தோளி காதலன்’ என்றார். மக்களுக்கு வறுமையுற்ற காலத்தில் பயன்படும் சேமநிதி போல, அன்பர்க்குத் தளர்ச்சியுற்ற காலத்தில் பயன்படுவான் இறைவன்
|