பக்கம் எண் :

திருவாசகம்
84


நீக்கமில்லாமல் நிறைந்து, மேவிய பெருமை - பொருந்திய பெருந்தன்மையை, இன்று - இப்பொழுது, எனக்கு - அடியேனுக்கு, எளி வந்து அருளி - எளிதாக வந்த உணர்த்தியருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த - அழிகின்ற இவ்வுடம்பை ஒழியப் பண்ணின. ஒண்பொருள் - சிறந்த பொருளானவன், இன்று எனக்கு எளிவந்திருந்தனன் போற்றி - இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்; அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி - கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்; ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி - இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்; ஆற்றா இன்பம் - தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம், அலர்ந்து - பரவி, அலை செய்ய - அலை வீச, போற்றா ஆக்கையை - அதனை ஏற்றுப் போற்றாத உடம்பை, பொறுத்தல் புகலேன் - தாங்குதலை விரும்பேன்.

விளக்கம் : பித்து, பிச்சு எனப் போலியாயிற்று. பத்தி பரவசப்பட்டவர் பித்தர் போன்றிருப்பர் என்க. உயிர்க்கூட்டங்களுக்கு ஆற்றலைத் தந்து செயற்படுத்துபவன் என்பார், "நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇ" என்றார்.

விண், வளி, தீ, நீர், மண் என்ற ஐந்தும் விண் முதற்பூதமாவன. காரணத்தில் சூக்குமமாக ஒடுங்கியிருந்த பூதங்களைத் தூலமாகக் காரியப்படுத்துபவன் இறைவன் என்பார், ‘விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்’’ என்றார்.
அவ்விறைவனை மனம், வாக்கு, காயமாகிய திரிகரணங்களாலும் பற்ற இயலாது. எனினும், மலரின் மணம் போல எங்கும் நீக்கமற நிறைந்திருப்பான் என்பார். ’‘பூவில் நாற்றம் போன்றுயர்ந்து எங்கும் ஒழிவற நிறைந்து’’ என்றார்.

யாக்கை என்பது ஆக்கை என மருவிற்று; எழுவகைப் பொருள்களால் கட்டப்பட்டது என்பது பொருள். அழிகின்ற ஊனுடம்பின் குற்றங்களை நீக்கி, அன்பால் உருகும் இன்ப உடம்பினை ஆக்கினான் என்பார், ‘அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள், அளிதரும் ஆக்கை செய்தோன்’ என்றார்.

அடுத்து, என் உள்ளத்தில் விளங்கித் தோன்றிப் பேரின்பத்தைக் கொடுக்கின்றான் என்பதைக் காட்ட "ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்ய" என்கிறார். அதனால், அடிகளுக்கு உடம்பும் மிகையாகத் தோன்றுகிறது. "போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்" என்கிறார். "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை" என்ற நாயனாரின் அருள் வாக்கு ஒப்பு நோக்கி இன்புறத்தக்கது.