அவ்விடத்திலே மறைந்தும், முனிவு அற நோக்கி - கோபமில்லாமல் பார்த்து, நனிவர கவ்வி - மிகுதியாகப் பற்றி, ஆண் எனத் தோன்றி - ஆண் போலத் தோன்றியும், அலி எனப் பெயர்ந்து - அலி போல இயங்கியும், வாள் நுதல் பெண் என ஒளித்தும் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும், சேண்வயின் - தூரத்தில், ஐம்புலன் செல விடுத்து - ஐம்புலன்களைப் போக நீக்கி, அருவரைதொறும் போய் - அரிய மலைதோறும் சென்று, துற்றவை துறந்த - பொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட, வெற்று உயிர் ஆக்கை - வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய, அருந்தவர் காட்சியுள் - அரிய தவத்தினர் நோக்குக்கும், திருந்த ஒளித்தும் - செம்மையாக மறைந்தும், ஒன்று - ஒரு பொருள், உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் - உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும், பண்டே பயில் தொறும் இன்றே பயில்தொறும் - முன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும் எப்பொழுதும், ஒளிக்கும் சோரனை - மறைகின்ற கள்ளனை, கண்டனம் - கண்டோம், ஆர்மின் ஆர்மின் - ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள், நாள் மலர் பிணையலின் - புதிய மலர்மாலைகளால், தாள் தளை இடுமின் - திருவடியைக் கட்டுங்கள்; சுற்றுமின் - சுற்றுங்கள்; சூழ்மின் - சூழுங்கள்; தொடர்மின் - பின் தொடருங்கள்; விடேன்மின் - விடாதேயுங்கள்; பற்றுமின் - பிடியுங்கள்; என்றவர் - என்று சொல்லியவர்களது, பற்று - பற்றுதற்கு, முற்று ஒளித்தும் - முழுதும் மறைந்தும். விளக்கம் : மரகதம் - பச்சை மணி, மாமணி - சிவப்பு மணி, மாணிக்கம். மரகதம் - இறைவி (பச்சை நிறமுடையவள்), மாமணி - இறைவன்; (செம்மேனியம்மான்), இவ்விருவரும் சேர்ந்த ஒளி மின்னொளி கொண்ட பொன்னொளி. இவ்வாறு அம்மையப்பனாகிய பெருமான் சோதி வடிவமாய் விளங்கித் தோன்றியது திருவண்ணாமலையிலாகும். திருமாலும் பிரமனும் செருக்கினால் காண முயன்றும் காணாது மயங்கிய வரலாறு முன்னர்க் குறிப்பிடப்பட்டது. முறையுளியொற்றி முயன்றவர் யோகியர். உற்றவர் வருந்த உறைப்பவர் வைராக்கிய புருஷர். மறைத்திறம் நோக்கி வருந்தினர் அறிஞர். இத்தந்திரத்தால் காண்டுமென்போர் சமயவாதியர். வெற்றுயிராக்கை அருந்தவர் முனிவரர். விடேன் மின் பற்றுமின் என்றவர் புத்தர். இவ்வறுவரும் தன் முனைப்பினாலே காண முயன்றதனாலே, இறைவன் ஒளித்தனன். நான் என்பது அறாவிடில் இறைவனை அடைய இயலாது என்பது இதனால் விளக்கப்பட்டது.
|