உரிய குடிலாகிய உடம்பை, ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் - ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப்பண்ணினான், எனக்கு - அடியேனுக்கு, தடக்கையின் நெல்லிக்கனி ஆயினன் - பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான். விளக்கம் : தனக்கு உவமையில்லாத இறைவன் சீவனோடு கலப்பினால் ஒன்றாயினும், தன்மையால் வேறாய் இருக்கின்றான் என்பதைத் "தானே ஆன தன்மை" என்பதால் தெளிவுபடுத்தினார். முன்னர்க் கூறப்பட்ட அறுவரும் தன்முனைப்பினாலே காண முயன்றனர். அதனால் இறைவன் ஒளித்தான். ஆனால், அடிகள் தமக்கென ஒரு செயலின்றி எல்லாம் இறைவன் செயல் என்றே இருந்தமை பற்றி வெளிப்பட வலிய வந்து அருளினான் என்ற உண்மை "அறைகூவி ஆட்கொண்டருளி மறையோர் கோலங் காட்டி அருளலும்" என்றமையால் உணரப்படுகிறது. "பித்தம் மயக்கத்தைச் செய்வதாதலின், அறிவு மயங்கினோரைப் பித்தர் என்றும், மதம் களிப்பினைத் தருவதாகலின், அதனையுடையார் மத்தர் என்றும் வேறு பிரித்து ஓதப்பட்டார்." (மறைமலையடிகள்) அருட்சத்தி வீழப்பட்டாரின் நிலை இஃதாகும். அடிகளது உள்ளமும் உடலும் சிவானந்தப் பெருக்கினால் இன்ப மயமாயினமையைக் கூறுவார். "அவயவம் கோல் தேன் கொண்டு செய்தனன்" என்றார். முன்னானில் மூன்று அசுரர்கள் இரும்பு வெள்ளி பொன்னாகிய உலோகங்களினால் மூன்று கோட்டைகளைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். தேவர்களுக்கு இரங்கி இறைவன் அத்தேவர்களையே படைக்கலங்களாகப் படைத்துக்கொண்டு திரிபுரம் அழிக்கச் சென்றான். ஆனால், அவர்களது உதவியில்லாமல் சிரிப்பினால் மூன்று கோட்டை களையும் அழித்து அருள்புரிந்தான் (கந்தபுராணம்). திருப்பெருந்துறையில் அன்று தன்னை நீத்து உடன் சென்ற அடியார்களோடு கலந்தருளின வரலாற்றை "அருட்பெருந்தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்" என்பதனால் குறிப்பிட்டார். ஆனால், ‘எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல இருக்கிறான் இறைவன்’ என்று அடிகள் கூறினார். நெல்லிக்கனி உண்டார்க்குத் தாகவிடாய் தீர்தலோடு இனிமைச் சுவையும் கிடைக்கிறது; அது போல, இறைவனை அடைந்தார்க்குப் பிறவித்துன்பம் நீங்குதலோடு பேரின்ப வீடும் கிடைக்கிறது என்ற உவமை நயமும் காண்க. இதனால், ‘நான்’ என்பது அற்றவர்க்கு இறைவனை அடைய இயலும் என்பது கூறப்பட்டது.
|