சொல்லுவ தறியேன் வாழி! முறையோ தரியே னாயேன் தான்எனைச் செய்தது 165. தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீ ருள்ளகந் ததும்ப 170. வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்தழை குரம்பு தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் 175. எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் 180. கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா லறியாப் பெற்றி யோனே. பதப்பொருள் : சொல்லுவது அறியேன் - இவ்வாறு எனக்கு எளிவந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன், வாழி - அவன் வாழ்க; தான் எனைச் செய்தது - அவன் என்னைச் செய்த நிலையை, நாயேன் தரியேன் தெரியேன் - நாயினேன் ஆற்றேன், அதன் காரணத்தையும் அறிந்திலேன்; முறையோ - இது எனக்குச் செய்யும் முறையோ? ஆவா செத்தேன் - ஐயோ செத்தேன்! அடியேற்கு அருளியது அறியேன் - அடியேனுக்குச் செய்த அருளையும் அறியேன், பருகியும் ஆரேன் - சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்; விழுங்கியும் ஒல்லகில்லேன் - முழுதுமாய் விழுங்கியும் பொறுக்கமாட்டேன்; செழுந்தண் பால் கடல் திரை புரைவித்து - செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை நிகர்வித்து, உவாக் கடல் - நிறைமதி நாளில் பெருகும் கடலில், நள்ளும் நீர் - பொருந்திய நீர் போல, உள் அகம் ததும்ப - உள்ளத்தினுள்ளே பொங்க, வாக்கு இறந்த அமுதம் - சொல்லிறந்த அமுதமானது, மயிர்க்கால் தோறும் - ஒவ்வொரு மயிர்க்காலிலும், தேக்கிடச் செய்தனன் - நிறையச் செய்தனன்; நாய் உடல் அகத்தே - நாயினேனது உடலின்கண்ணே, குரம்பை கொண்டு - இருக்கை கொண்டு, கொடியேன் - கொடியேனுடைய, ஊன்தழை - மாமிசம் செழித்து, குரம்புதோறும் - ஒவ்வொரு மடையிலும், இன்தேன் பாய்த்தி - இனிய தேனைப் பாய்ச்சி, நிரம்பிய - நிறைந்த, அற்புதமான - ஆச்சரியமான, அமுத தாரைகள் - அமுத தாரைகளை, ஏற்புத்
|