பக்கம் எண் :

திருவாசகம்
90


துளைதொறும் - எலும்புத் துளைதோறும்; ஏற்றினன் - ஏறப் பண்ணினன்; உருகுவது உள்ளம் கொண்டு - உருகுவ தாகிய மனத்தைக் கொண்டு, ஓர் உருச் செய்தாங்கு - ஓர் உருவம் அமைத்தாற்போல, எனக்கு - அடியேனுக்கு, அள்ளூறு ஆக்கை அமைத்தனன் - மிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான்; கன்னல் கனி தேர் களிறு என - இனிதாகி கனியைத் தேடுகின்ற யானை போல, கடைமுறை - இறுதியில், என்னையும் இருப்பது ஆக்கினன் - அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினான், என்னில் - என்னுள்ளே, கருணை வான்தேன் கலக்க - அருளாகிய பெருந்தேன் பாயும்படி, அருளொடு - அருளொடு எழுந்தருளி, பரா அமுது ஆக்கினன் - மிக்கு அமுதத்தினையும் அமைத்தான், பிரமன் மால் அறியாப் பெற்றியோன் - பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுள்ளான்.

விளக்கம் : ஒரு பொருளை அறிதல் என்பது ‘காண்பான், காட்சி, காணப்படும் பொருள்’ என்ற மூன்றினாலும் நிகழும். பொருளை அறிந்த பின் அனுபவமும் நிகழும்போது இம்மூன்று பாகுபாடும் தோன்றா. ஆகவே, அனுபவத்தில் சொல் இல்லை. அதனால், இறை அனுபவத்தில் இருக்கும் அடிகள், "சொல்லுவது அறியேன்" என்கிறார்.

பேரின்பம் எக்காலத்தும் தெவிட்டுதல் இல்லையாகையால், "பருகியும் ஆரேன், விழுங்கியும் ஒல்லகில்லேன்" என்றார்.

பேரின்பம் வரம்பில் இன்பமாய்க் கரை கடந்து பெருகி நின்றமையைக் காட்ட வேண்டி, "பாற்கடல்" என்றும், "உவாக்கடல்" என்றும் கூறினார். பின்னர், அவ்வின்பத்தைத் தம் உடம்பளவில் நின்று அனுபவிக்கச் செய்த நிலைமையை விளக்குவார், "நாயுடலகத்தே குரம்பை கொண்டு" என்றும், "குரம்பு தோறும் இன்தேன் பாய்த்தி" என்றும் கூறினார். (1. குரம்பை - குடில், 2. குரம்பு - மடை) பேரின்ப அனுபவத்தால் உடம்பு முழுதும் உள்ளமாய் நின்று உருகினமை கூறுவார், "உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச் செய்தாங்கு" என்றார்.

இறைவன் உடலிடம் கொண்ட பின்னர், உடல் முழுதும் அமுத தாரைகளை நிறைவித்து அமுதம் ஊறும் இடமாக அமைத்தனன் என்பார், "என்னில் கருணை வான் தேன் கலக்க அருளொடு பரா அமுதாக்கினன்" என்றார்.
தம்மை ஈங்கொழித்தருளித் தன்னுடன் வந்த அடியாரோடும் கலந்தருளினான் என்பார். "கடைமுறை என்னையும் இருப்பதாகக்கினான்’ என்றார். பிரமன் மாலறியா வரலாறு முன்னர்க் கூறப்பட்டது.

இதனால், இறை இன்பம் கூறப்பட்டது.