பக்கம் எண் :

திருவாசகம்
91


4. போற்றித் திருவகவல்
(இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)

சகத்தின் உற்பத்தி

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

நான்முகன் முதலா வானவர் தொழுதொழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்

5. றடிமுடி யறியும் ஆதர வதனிற்
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தல முருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்

10. வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில்
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

15. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

20. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்