பக்கம் எண் :

திருவாசகம்
99


துதித்தற்கு எளிதாகி, வார்கடல் உலகினில் - நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில்.

விளக்கம் : திருமால் உலகளந்தது : மாவலி என்னும் அசுரன் ஒரு பெரிய வேள்வி இயற்றினான்; அதனால் வேண்டுவோர்க்கு வேண்டுவதை ஈயும் வள்ளலானான்; அதன் பயனால் அவன் வலுப்பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்துவான் என்று அஞ்சி, அவனது வலிமையைப் போக்குமாறு நான்முகன் முதலாயுள்ள வானவர்கள் திருமாலை வேண்டினார்கள். திருமாலும் ஒரு குறள் (குட்டை) வடிவம் கொண்டு, மாவலியிடம் சென்று, மூன்றடி மண் வேண்டினார். அவன் இசையவே, திருமால் தம் இரண்டு அடிகளாலும் மண் வளி விண் ஆகிய மூன்று உலகங்களையும் அளந்து, மாவலியின் வலிமையைப் போக்கிப் பாதலாத்திற் சிறைவைத்தார் என்பது வரலாறு. இவ்வாறு மாவலியின் செருக்கினை அழித்தமையால், நான்முகன் முதலான வானவரும் முனிவரும் திருமாலைத் தொழுதனர்.

இத்துணை உயர்வுடைய திருமால், இறைவனது திருவடியைக் காண இழிவான பன்றி வடிவு எடுத்துத் தேடியும் காண்கிலர் என்பார். "ஏனமாகி ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து" என்றார். ஏழ்தலமாவன : அதல விதல சுதல தராதல இரசாதல மகாதல பாதலம் என்பன. திருமால் திருவடியைத் தேடின வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. இறைவனது திருவடியைக் காண முடியாமையால், அவனது பெருமையை உணர்ந்து வாழ்த்தினார் என்பார், "வழுத்தியும் காணா மலரடி யிணைகள்" என்றும், அத்தகைய திருவடிகளை அடியார்களுக்கு இவ்வுலகிலே எளிதாகக் காட்டியருளினான் என்பார், "வார்கடல் உலகினில் வழுத்துதற்கெளிதாய்" என்றும் கூறினார். "எளிதாய்" என்பதை, "அருபரத்தொருவன் அவனியில் வந்து" என்பதனோடு கூட்டிக்கொள்க.

இதனால், இறைவனது திருவடிப் பெருமையும், எளிமையும் கூறப்பட்டன.

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

15. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்