வாக்கால் புலனாகும். ] விழாக் காலங்களில் சிவயோகிகளுக்கு அன்னம் அளிக்கப்பெற்று வந்தது. திருவிழா நாட்களில் எழுந்தருளும் திருமேனிகளுக்குப் பழவரிசியால் சமைக்கப்பட்ட போனகம்; பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, கடுகு, நெய் இவைகொண்டு செய்த புளிங்கறியமுது, காய்க்கறியமுது, பொரிக்கறியமுது: இவை அமுதுசெய்விக்கப்பெற்றன. திருமஞ்சனம் முதலியன : இக் கோயிலில் சிறுகாலை, உச்சியம்போது, இராவை என்ற மூன்று காலத்தும் பூசை நடைபெற்றுவந்தது. பெருஞ்சண்பக மொட்டு, ஏலவரிசி, இலாமச்சம் இவைகளை ஊறவைத்த நீரால் திருமஞ்சனம் ஆட்டிவந்தனர். பழவரிசியால் சமைத்த போனகம், கறியமுது, பருப்பமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது, வெள்ளிலை அமுது இவைகொண்டு அமுது செய்விக்கப்பட்டன. திருவமுது செய்விக்கும்பொழுது திருப்புகைக்குக் கொண்டது சீதாரியாகும். [ சீதம் - குளிர்ச்சியை அரி - போக்குவது] சீதாரி என்பது சந்தனத்தூள். ‘‘ திருமெய்ப்பூச்சுக்கும் சீதாரிக்குமாக நிசதம் சந்தனம் முப்பலம்’’ என்னும் கல்வெட்டுத் தொடர் இதற்குச் சான்றாகும். திருப்பதியம் விண்ணப்பிக்க நிவந்தம்: முதலாம் இராசராசசோழன், தஞ்சை இராசராசேச்சரத்தில் திருப்பதியம் விண்ணப்பிக்கப் பிடாரர்கள் நாற்பத்தெண்மர்களையும், உடுக்கை வாசிக்க ஒருவரையும், கொட்டி மத்தளம் வாசிக்க ஒருவரையும் ஆக ஐம்பதின்மர்களை நியமித்து அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு இராச கேசரியோடு ஒக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் நாடோறும் முக்குறுணி நெல் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தான். ஒருநாளைக்கு முக்குறுணி நெல்வீதம் ஓராண்டுக்குத் தொண்ணூறு கலங்கள் ஆகின்றன. இது அக்காலத்தில் நல்ல சம்பளமாகவே இருந்ததாகக் கொள்ளவேண்டும். திருப்பதியம் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள்: 1, பாலன் திருவாஞ்சியத்தடிகளான இராசராசப் பிச்சனான சதாசிவன். 2, திருவெண்ணாவல் செம்பொற்சோதியான தட்சிணமேருவிடங்கப் பிச்சனான ஞானசிவன். |