என்றதனைத் திரித்து, ‘எளியளாகிய இவள் நின்னிடத்தே வந்து விழ’ என உரைக்க. ‘குவளை மலரும் கோவாத மணிமுத்துச் சொரிந்தன’ என உம்மையை மாற்றி உரைக்க. குவளை மலர்-கண் ; உருவகம். ‘கோவாத மணியாகிய முத்து’ என்றது, கண்ணீரைக் குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென்-அழகு. 127. மெய் முழுதும்-தனது உடல் உறுப்புக்கள் பலவும் பழுது-குற்றம் உடையன. ஓராள்-அவற்றை மதிக்கின்றிலள் ; எனவே ‘உண்ணாமை, நீராடாமை, ஒப்பனை செய்யாமை முதலியவற்றால் அவைகளை வருத்துகின்றாள்’ என்பதாம். எல்லாப் பொருளும் நீயேயாயினும், நீ அங்ஙனம் எங்குமாய இன்பத்தை இவ்வுடம்புகொண்டு இவள் பெறாமையால், இதனை வெறுக்கின்றாள்’ என்பது பொருள். இதனால், சிவன் முத்திநிலையில் நிற்பார்க்கும் பரமுத்தி நிலைக்கண் உளதாகும் வேட்கை மிகுதி குறிக்கப்பட்டமை காண்க. ‘‘அதுவன்றோ பெறும் பேறு’’ என்றது, ‘‘இவள் பெற்றது அவ்வளவே’ என்னும் பொருட்டாய் அவலம் குறித்ததாயினும், உண்மைப் பொருளில், இவ்வுடம்புகொண்டு பெறும்பேறு அதுவேயன்றோ’ என்பது குறித்துநிற்கும். 128. ‘தன் மேனி’ என இயையும்.‘‘தன்’’ என்றது, தலைவியை. சோதி, இங்கு அழகு. மேனி-உடம்பு. உடம்பின் கண் தோன்றிய, தபனியப் பூச் சாய் காட்டாய்-பொற்பூப்போலும் நிறமே (பசலையே) தனது வருத்தத்திற்குச் சான்றாய்நிற்க. ‘‘ஆய்’’ என்றதனை, ‘ஆக’ எனத் திரிக்க. |