இவைகளினால் சிவதீட்சை பெற்றவர்களே திருப்பதியம் விண்ணப்பித்தல், கொட்டி மத்தளம் வாசித்தல், உடுக்கை வாசித்தல் ஆகிய இத்தொண்டுகளைச் செய்தற்கு உரியராவர் என்பதும், இத்தொண்டுகளில் சிறந்தவர்களுக்கு அரசன் பட்டங்களைச் சூட்டி, சிறப்பிப்பது வழக்கமென்பதும் பெறப்படுகின்றன. மேற்குறித்த திருப்பதியம் விண்ணப்பித்தவர்களின் இயற்பெயர்களுள் கூத்தன் மழலைச் சிலம்பு என்பது (19-ஆவது பெயர்) “வாமத் தெழிலாரெடுத்த பாத மழலைச் சிலம்பார்க்கத் தீமெய்ச் சடைமேற் திங்கள்சூடித் தேவனாடுமே (திருவாலி யமுதனார் திருவிசைப்பா - கோயில், பண் இந்தளம் பாடல் 5) என்னும் அடிகளையும் : நான்காவது பெயரில் வந்துள்ள சீருடைக்கழல் என்பது “செம்பொருட்டுணிவே சீருடைக்கழலே’’ என்னும் திருவாசகச் சொற்றொடரையும், நம் நினைவிற்குக் கொண்டு வருவனவாகும். இவைபோன்று ஏனைய பெயர்களையும் நோக்குவோமானால் சிறந்த கருத்துக்கள் புலப்படும். தளிச்சேரி பெண்டுகளுக்கு அளித்த நிவந்தங்கள்: தளிச்சேரி பெண்டுகள் என்பார் தேவதாசிகள் (Dancing girls) அல்லது தேவரடியார் ஆவர். இவர்கள் தளிப்பெண்டுகள் எனவும் வழங்கப்படுவர். இவர்கள் வசிக்கும் தெருக்கள் தளிச்சேரி எனப்பெயர்பெறும். ஓர்பெரிய ஊரில் ஒன்றுக்கு மேற்பட்ட தளிச்சேரிகள் இருந்தன. “திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் சீருடையாளுக்குப் பங்கு ஒன்று ’’ என்னும் கல்வெட்டுத் தொடரே இதற்குச் சான்றாகும். திருக்கோயில்களில் ஆடல் பாடல்களின் பொருட்டு இவர்கள் நியமிக்கப்பெற்று வந்தனர். இவர்களில் தலைசிறந்தவர்களுக்கு அரசன் தலைக்கோல் என்னும் பட்டத்தை அளித்துப் பாராட்டுவது உண்டு. இதைத் திருவையாற்று ஓலோகமாதேவீச்சரத்துக்கல்வெட்டில் காணலாம். “பொன்னியல் பூங்கொடி புரி்ந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினன் ஆதலிற் காவல் வேந்தன் இலைப்பூங் கோதை யியல்பினின் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி விதிமுறை கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே’’ |