என்னும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதைப் பகுதியில் வந்துள்ள தலைக்கோல் என்ற தொடர்க்கு அரும்பத உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் “ வரிசைக்குத் தக்கபடி தலைக்கோல் பெற்று என்று பொருள் எழுதியிருப்பதால் இத்தகைய பட்டம் சிலப்பதிகார காலத்திலேயே வழக்கத்தில் இருந்தமை ஈண்டு அறியத் தக்கதொன்றாம். நிற்க, முதலாம் இராசராசன் தஞ்சாவூரில் இராசராசேச்சரத்துக்குத் தெற்கிலும், வடக்கிலும் தளிச்சேரிகளைப் புதியனவாக அமைத்தான். அவைகளுக்குத் தெற்குத் தளிச்சேரி தென்சிறகு, - வடசிறகு; வடக்கில் தளிச்சேரி தென்சிறகு - வடசிறகு ; (பெயர் புலப்படாதவாறு கல்வெட்டில் சிதைந்து போன) மற்றொரு தளிச்சேரி என்னும் பெயர்களை வைத்தான். தெற்குத் தளிச்சேரி தென்சிறகில் 92, - வடசிறகில் 92, வடக்கில் தளிச்சேரி தென்சிறகில் 95, - வடசிறகில் 96, மற்றொரு தளிச்சேரியில் 25 ஆக 400 வீடுகளைக் கட்டினான். சோழமண்டலத்திலுள்ள அம்பர், அரபுரம் அவனி நாராயணபுரம், ஆமாத்தூர், ஆயிரத்தளி, திருவாரூர், திருவிடைமருதில், உத்தம தானிபுரம், திருவையாறு, கஞ்சாற நகரம், கடம்பூர், திருக்கண்டியூர், கருப்பூர், கற்பகதானிபுரம், காராயில், காவிரிப்பூம்பட்டினம், கிள்ளிகுடி, திருக்கொள்ளம்பூதூர், கொற்றுமங்கலம், கோட்டூர், சீகண்டபுரம், செல்லூர், திருச்சோற்றுத்துறை, தலையாலங்காடு, தளிச் சாத்தங்குடி, திருத்தெங்கூர், நயதீரபுரம், நல்லூர், நன்னிலம், நாகப்பட்டினம், நியமம், திருநெய்த்தானம், பந்தணைநல்லூர், பராந்தகபுரம், பல்லவ நாராயணபுரம், திருப்பழனம், பழுவூர், பழையாறைபாச்சில், பாம்புணி, புதூர், புறையாச்சேரி, மண்ணிநகரம், திருமறைக்காடு, மிறையில், வடவாயில், வயலூர், வீரபுரம், திருவெண்காடு, வேளூர், திருவேதிகுடி, ஜநநாதபுரம் முதலான ஊர்களிலுள்ள தளிச்சேரிகளிலிருந்து நானூறு தளிப்பெண்டுகளைக் கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடாக மேற்குறித்த நானூறு வீடுகளிலும் குடியேற்றினான். அவர்கள் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொருவேலி நிலத்தைப் பங்குசெய்து, அப்பங்குவழி ஒவ்வொரு வேலி நிலத்துக்கு வரக்கூடிய நூறு கல நெல்லை இராசகேசரியோடு ஒக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அவரவர்களுக்கு அளந்து விடும்படி ஏற்பாடுகளைச் செய்திருந்தான். இவர்களைக் குடியேற்றியது முன் குறித்தபடி கோயிற் பணிகளைப் புரிவதற்கேயாம். இந்த நானூறு தளிப்பெண்டுகளில் பெரும்பாலோர் அந்தந்த ஊர்களிலுள்ள திருக் |