கோயில்களில் தொண்டாற்றி வந்தவர்களே யாவர். இங்ஙனம் குடியேற்றப் பட்டவர்களில் சிலர் அரபுரத்துத்தாழி விண்ணகரம், தஞ்சை மாமணிக்கோயில், அம்பர் அவனி நாராயண விண்ணகர், பாம்புணி ஸ்ரீபூதி விண்ணகர் என்னும் திருமால் கோயில்களில் பணிபுரிந்தோர் ஆவர். முதலில் இங்குக் குடியேற்றப்பட்டவர்கள் திருவையாற்று ஓலோகமாதேவீச்சரத்தில் பணிகள் ஆற்றிவந்த நக்கன் சேரமங்கை. நக்கன் இரணமுகராமி, நக்கன் உதாரம், நக்கன் பட்டாலி, நக்கன் எடுத்தபாதம், நக்கன் சோழகுலசுந்தரி, நக்கன் ஏகவீரி என்னும் எழுவர் ஆவர். நக்கன் என்பது தளிச்சேரிப் பெண்டுகளுக்கு அவர்கள் திறமை குறித்த இராசராசனால் கொடுக்கப்பெற்ற சிறப்புப் பெயராகும். இங்ஙனமே ஏனைய முந்நூற்றுத் தொண்ணூற்று மூவர் பெயர்களின் முன்பு, தனித்தனி இந்த நக்கன் என்னும் சிறப்புப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் சிவப்பணிக்கே உரியவர்கள் என்பதும் புலப்படும். முதலாம் இராசராசன் திருவையாற்று ஓலோகமாதேவீச்சரத்துத் தளிச்சேரிப் பெண்டுகளில் சிலரைக் கொண்டுபோய் முதல்முதல் குடியேற்றியதற்குக் காரணம் அந்த ஓலோகமாதேவீச்சரம் அவனது முதற்பெருந் தேவியாராகிய ஓலோகமாதேவியாரால் கட்டப்பட்டது. ஆதலால் அதிலிருந்துகொண்டுபோய்க் குடியேற்றுவது அத்தேவியார்க்கு உவப்பை உண்டாக்கும் என்னும் எண்ணம் பற்றியாகலாம். அல்லது திருவையாற்றுத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ள “ வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே’’ “காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே’’ என்னும் தேவார அடிகள் சிறந்த சிவபத்திச் செல்வனாகிய அவன் திருவுள்ளத்தில் பதிந்திருந்ததன் விளைவாய்த் திருவையாற்றுத் தளிச்சேரி பெண்டுகள் பண்டுதொட்டே நடனக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என அவன் கருதியது ஆகலாம். |