பெறல் தமக்கையாரின் பெயர். அருமொழி என்பது முதலாம் இராசராசசோழனுடைய மற்றொரு மகளாரின் பெயர். “அருமொழி சந்திரமல்லியரான கங்கமாதேவியார்’’ என்னும் திருவையாற்று ஓலோகமாதேவீச்சரத்துக் கல்வெட்டுப் பகுதியே இதற்குச் சான்றாகும். இங்ஙனம் அரச குடும்பத்தார்களின் திருப்பெயர்களைத் தளிச்சேரிப் பெண்டுகளுக்கு வைத்து வழங்கப் பெற்றமையால் இத்தளிச்சேரிப் பெண்டுகளின் பெற்றோர்கள் அரச குடும்பத்தில் அளவிறந்த இராசபக்தி உடையவர்களாய்த் திகழ்ந்திருந்தனர் என்று கொள்ளலாம். நட்டுவஞ்செய்ய நட்டுவர் அறுவர், நாடகம் நடிக்க நால்வர், கானபாடிகள் மூவர், வங்கியம் வாசிப்பார் மூவர், பாடவியம் வாசிப்பார் நால்வர், உடுக்கை வாசிப்பார் இருவர், வீணை வாசிப்பார் இருவர், ஆரியம்பாடுவார் மூவர், தமிழ்பாட நால்வர், கொட்டிமத்தளம் அடிக்க இருவர். முத்திரைச் சங்கு ஊத இருவர், பக்கவாத்தியர் ஐவர், காந்தர்வர் ஐவர், தளிச்சேரிப் பெண்டுகளுக்கும், காந்தர்விகளுக்கும் நாயகஞ் செய்ய இருவர், கணக்கு எழுத நால்வரும் அவர்களுக்குக்கீழ் கணக்கு எழுத எண்மரும் ஆகப் பன்னிருவர், திருவாய்க் கேள்விகள் இருவர், உவச்சர் பதினொருவர், சகடைக்கொட்டிகள் ஐம்பத்தைவர், திருப்பள்ளித் தொங்கல் பிடிப்பார் பதினொருவர், விளக்குடையார்கள் எண்மர். நீர்த்தெளியான் நால்வர், சன்னாலியன் இருவர். திருமடைப்பள்ளிக்குக் குசவர் பதினொருவர், வண்ணத்தார்கள் இருவர், காவிதியை செய்வார் இருவர், நாவிசஞ் செய்வார் இருவர், திருஇருவரும் அவர்களுக்குக் கீழ் ஆள் இருவர் இருவராக நால்வரும் ஆக அறுவர், கோலினமை செய்வார் இருவர், அம்பட்டன் ஒருவன், தய்யான் ஒருவன், இரத்தினத் தய்யான் (Jewel stitcher) ஒருவன், கன்னான் ஒருவன், தச்சாசாரியார் மூவர், தச்சு (carpenter) இருவர், பாணர் மூவர், கண்காணித் தட்டாண்மை செய்வார் ஒருவர் என்னும் இவர்களை முதலாம் இராசராசசோழன் தஞ்சை இராசராசேச்சரத்துக்கு நியமித்திருந்தான். இவர்களுள் நட்டுவர் என்பார் நாட்டியம் பழக்கி ஆட்டுவிப்பவர். கானபாடிகள் இசைப்பாட்டு பாடுபவர். காந்தர்வர் என்பார் பாடுபவர். திருவாய்க்கேள்வி என்பார் அரசன் திருவாய் மலர்ந்தருளியவற்றைக் கேட்டுவந்து உணர்த்துபவர். உவச்சர் என்பார் சங்கு, காளம் இவைகளை ஊதுபவர். சகடைக் கொட்டிகள் என்பார் பெரிய மேளம் அடிப்பவர். திருப்பள்ளித் தொங்கல் பிடிப்பார் என்பவர் கோயில் மூர்த்திகட்குச் சாத்தப் |