கலமாகக் கொடுக்கப்பெற்று வந்தது. மேற்குறித்தவர்களில் இன்னார்க்கு இவ்வளவு பங்கு என்பதை விரிவஞ்சி இங்குக் குறித்திலேன் எனினும் சகடைக்கொட்டிகளுக்கு உட்படும் ஆட்கள் நாற்பத்தைந்து பேர்களுக்குத் தலைக்கு அரைப்பங்குடன் பாதவக் காணியம் கொடுக்கப்பெற்று வந்தது. இங்கே பாதவக் காணியம் என்பதற்கு (allowance) என்று பொருள். பண்டாரி, பரிசாரகர், கரணத்தார் இவர்களை நியமித்தது: முதலாம் இராசராசசோழன், இராசேச்சரம் உடையார்க்குப் பண்டாரஞ்செய்ய பிராமணரையும். திருப்பரிசாரகஞ் செய்ய மாணிகளையும், கணக்கெழுத கரணத்தார்களையும், சோழ மண்டலத்துப் பிரமதேயங்கள், பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துப் பிரமதேயங்கள், தொண்டை நாடான சயங்கொண்ட சோழமண்டலத்துப் பிரமதேயங்கள் இவைகளிலிருந்து இடுமாறு பணித்திருந்தான். இவர்களில் பூமிசம்பத்தும், அர்த்த சம்பத்தும், பந்து சம்பத்தும் உடையராய் இருந்தவர்களே பண்டாரிகளாக (As temple treasurers) நியமிக்கப்பெற்றிருந்தனர். இங்ஙனம் பண்டாரிகளாக நியமிக்கப் பெற்றிருந்தவர் பிராமணரேயாவர். முதலாம் இராசராசன் கட்டளைப்படி இவர்களை இட்டவர், அருமொழி தேவ வளநாட்டு மங்கலநாட்டு மங்கலத்துச் சபையாரும், இராசேந்திர சிங்கவளநாட்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்துச் சபையாரும், கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்து ராஜாசிரிய சதுர்வேதிமங்கலத்துச் சபையாரும், நித்தவிநோத வளநாட்டு இராசகேசரி சதுர்வேதிமங்கலத்துச் சபையாரும் ஆவர். இச்சபையார் தங்கள் தங்கள் ஊர்களிலிருந்து ஒவ்வொருவராக நால்வரை அனுப்பியிருந்தனர். எனவே தஞ்சை இராசராசேச்சரத்தில் பண்டாரிகளாக வேலை பார்த்து வந்தவர் நால்வர் ஆவர். பண்டாரி ஒருவர்க்குச் சம்பளம் ஓராண்டுக்கு நெல்கலம் இவ்வளவு என்பது கல்வெட்டில் சிதைந்துபோய்விட்டது. இவர்கள் தங்கள் சம்பளத்தை ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் உடையார் நாட்டுப் பண்டாரத்தில் (country treasury) பெற்று வந்தனர். பரிசாரகர் என்பார் ஏவல் தொழில் அல்லது சமையல் தொழில் செய்வோர் ஆவர். இங்கு ஏவல் தொழிலுக்கு (Temple servants) உரியவர் என்பது டாக்டர் உல்ஷ் துரைமகனாரின் கருத்தாகும். இத்தொழிலுக்கு நியமிக்கப்பெற்றவர் மாணிகள் |