இவர்களுக்கு நிசதம் நெல் பதக்கும் ஆண்டுதோறும் காசு நான்கும் கொடுக்கப்பட்டுவந்தன. இவர்களிலே நிலையாய் தீக்ஷித்தார் பதின்மர்க்குப் பேரால் நிசதம் நெல் முக்குறுணியும், ஆண்டுதோறும் காசு நான்கும் கொடுக்கப்பட்டுவந்தன. இவர்கள் பெறும் நெல்லும் காசும் இராசராசேச்சரமுடையாரின் உள்ளூர்ப் பண்டாரத்தே கொடுக்கப்பட்டுவந்தன. மேற்குறித்த ஊர்ச் சபையார்களில் பராந்தக சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நான்கு மாணிகளையும், வீர நாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பன்னிரண்டு மாணிகளையும் இட்டிருந்தனர். ஏனைய சபையார்களில் சில சபையார் ஒவ்வொரு மாணிகளையும், சில சபையார் இரண்டு இரண்டு மாணிகளையும் விட்டிருந்தனர். இவர்களின் தொகை சுமார் நூற்றைம்பது இருக்கலாம். (கல்வெட்டு சிற்சில இடங்களில் உதிர்ந்துவிட்டமையால் சரியானதொகையை எண்ணி எழுதமுடியவில்லை) குறிப்பு- சதுர்வேதிமங்கலம் என்பது சில சிற்றூர்களைத் தன்னகத்துக்கொண்டது. தீக்ஷித்தார் என்பதற்கு “Those who had taken permanent vows ’’ என்பர் டாக்டர் உல்ஷ். N. B:- மேற்குறித்த பரிசாரகர் என்ற தலைப்பின்கீழ் அடங்கிய பகுதிகளால் சோழமண்டலம் முதலாம் இராசராசன் காலத்தில் வளநாடுகளாகவும், நாடுகளாகவும், கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்த செய்தியும், நாடு, கூற்றங்களுக்கு உட்பட்டிருந்த ஒவ்வொரு ஊரிலும் ஊர்ச்சபை இருந்த செய்தியும் அறிந்து இன்புறத்தக்கதாகும். கரணத்தார் என்பவர் கோயில் கணக்கு எழுதுபவர் (Accountants) ஆவர். இவர்க்கு ஓராட்டைக்கு நெல் இருநூற்றுக்கலமும், இவர் இடக்கடவ கீழ்க்கணக்கு (Under accountant) ஒருவர்க்கு ஓராட்டைக்கு நெல் எழுபத்தைங்கலமாக இருவர்க்கு நெல் நூற்றைம்பது கலமும் கொடுக்கப்பட்டுவந்தன. இவர்கள் இந்தநெல்லை இராசராசேச்சரமுடையார் நாட்டுப்பண்டாரத்தே பெற்றுவந்தனர். முதலாம் இராசராசன் கட்டளைப்படி இவர்களை இட்டவர்:- 1. உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருநறையூர் நாட்டுத் தண்டந்தோட்டமான மும்மடி சோழ சதுர்வேதிமங்கலத்துச் சபையாரும், 2. வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரும், 3. வளநாட்டுக் குறும்பூர் நாட்டுத் தேவதானம் திருவிடைக்கழி சபையாரும்; |