"வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால் வாடி ஞானமென் னாவது மெந்தை வலஞ்சுழி நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் கொண்டிசை பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே." (சம்பந்தர், 2, 2 - 11.) நம் தமிழ் தொன்மையும் நன்மையும் வாய்ந்தது. முன்மையும் மென்மையும் முகிழ்த்தது. தனிமையும் இனிமையும் தவழ்வது. 'கன்னடம் களிதெலுங்கு' முதலிய பல கிளை மொழிகளுக்குத் தாயாகத் திகழ்வது. பல மொழிகளுக்குத் தாயாக நிலவினும் தான் என்றும் கன்னித் தன்மை அழியாது மன்னுவது. ஒரு காலம் உலக முழுவதும் நிலவித் தன்னொளி பரப்பி ஒளிர்ந்தது. தனித்தியங்கும் பேராற்றல் வாய்ந்தது. உயிர்ப்புச்செட்டுமிக்குள்ளது. எம்மொழிக் கண்ணும் இல்லாத பொருளிலக்கணக் கருவூலத்தையுடையது. ஆரியம்போல் உலக வழக்கு அழியாதது சீரிய பண்பாடு பல நிரம்பியது. ஒருந்தோறும் உவகைதரும் தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் முதலிய சிறந்த நூல்கள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டு, மிளிர்வது. இவ்வுண்மைகள் அனைத்தும் ஒருங்கு புலப்படுமாறு சேக்கிழாரடிகள் 'ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்' என்றருளினர். அவ்வுண்மை பிற்காலப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் பெருமொழியானும் உணரலாம். அது வருமாறு : "சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே." (மனோன்மணீயம், தமிழ்த்தெய்வ வணக்கம் - 3.) அத்தகைய அருந்தமிழால் திருந்திய மணவினை, தெய்வவழிபாடு, பொருந்து நல்லாட்சி முதலிய அனைத்தும் தொன்று தொட்டு தொடர்ந்து சிறப்புற நடந்துவந்துள்ளன. இடையே ஆரியக் கூட்டுறவால் அவை மாறத்தொடங்கின. அங்ஙனம் தொடங்கிய காலத்து ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரும், தெய்வத் திருவருள் கைவரப்பெற்ற மெய்யுணர்வினரும் உலகுய்யவும், உண்மை என்றும் பொன்றாதுநின்று நிலவவும் அவற்றை எதிர்த்து உண்மை நாட்டி வரை செய்துள்ளனர். அப்பெருந்திருவினர் அரும்பாடுபட்டு நிலைநாட்டியவைகளும் சில நூற்றாண்டுகள் சென்றதும் அமைதியாக மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் வழக்கு வீழ்வவாயின. அங்ஙனம் செய்யும் குழுவினரும் அன்றுதொட்டு இன்றுகாறும் நம்முடனிருக்கும் நல்லோரேயாவர். நம் அருந்தமிழ்த்தாய் எத்தனையோ இடுக்கண்களைத் தப்பி இன்றும் வளங்குன்றாது நிலைத்திருக்கின்றாள் என்றால் அதற்குக் காரணம் அவள்தன் இயற்கை எழில்நலம் வாய்ந்த தெய்வத் தன்மையேயாகும்.
|