பக்கம் எண் :

1295
 

சிவபெருமானுக்கு அடிமையாக்குதல் 'ஆண்டாற் கடிமையாய் அவ்வன்பால் தானொழுகல்' நண்டுவீ டாம்தன் னிழப்பு' என்பதனாலும் இவ்வுண்மை உணரலாம். இந்நிலையினை விழைவார் எல்லா மந்திரங்கட்கும் யுயிராய், யாவற்றையும் இயக்கும் தன்மையதாய், எல்லாப் பொருண்மையையும் விளக்குவதாய் ஆதியந்தம் இல்லாததாய் திகழ்வது திருவைந்தெழுத்தாகும் என்னும் மாறாவுண்மையினை யுணர்வர். அதனையே இந் நான்காம் தந்திரம் விளக்குகின்றது. முதற்கண் ஊமை எழுத்தாகிய அசபையும், அதன்பின் சக்கரங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையும் முன்மையும் வாய்ந்த திருவம்பலச் சக்கரமும் வகுத்தருளினர். திருவம்பலச் சக்கரத்துத் திருமந்திரம் உயிர்மந்திரமாகிய 'சிவயநம' (903) என்னும் திருவைந்தெழுத்தாகும். அதுவே எல்லாவற்றிற்கும் ஆதிமந்திரமாகும். ஆதி - காரணம். அவ்வுண்மை வரும் திருமுறைத் திருப்பாட்டான் உணரலாம் :

"ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்திற்றாம் புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண் குண்டர்கள் தளர்ந்தார்."

(12, சம்பந்தர், 698)

அதன்பின் அச் சக்கரத்தின் வழிபாடமைத்தனர். அதன் வழிபாட்டிற்கு இன்றியமையாது வேண்டப்படும் தழலோம்பல் காணப்படும். அடுத்துத் திருவருளம்மையின் சக்கரம். அம்மையும் அப்பனும் உயிரும் அறிவும் போன்றொன்றே. பின் வயிரவி மந்திரம் அம்மையின் முதன்மையாகும். பின் அத் திருவருளம்மையின் முழுவாற்றல் காணப்படும். அவ் வம்மையே எஞ்ஞான்றும் பொன்றுதலின்றித் தாங்கும்நிலை தாங்கப்படுநிலை என்னும் இரண்டுமாய் நிறைந்து நிற்பள். இந்நிலையினை முறையே ஆதாரம் ஆதேயம் என்ப. பின் அழகொளி திகழும். பின் வயிரவச் சக்கரம் காணப்படும். பின் இன்பநிறை இறைவியின் சக்கரம், உலகிறைவற் சக்கரம் காணப்படுகின்றன. பின் அம்மையின் நவாக்கரி சக்கரம் அமைத்துள்ளனர். இவ் வடிப்படைத் தமிழ் வழிபாட்டினால் ஆகமச் சிறப்புச் சிவவழிபாடு வரும் ஐந்தாம் தந்திரத்தருளுகின்றனர். வீடென்பது, பற்றப்படும் உலகியற் பொருள்களையும் உடலையும் நீக்குவதன்று. அப் பொருள்கள் விழுத்துணையாம் சிவபெருமானை அடையச் செல்லும் செந்நெறிக்கு வழித்துணையாம் என்னும் உண்மையினை ஓர்ந்து, அவை தம்முடைய உடைமையல்ல சிவபெருமானின் உடைமைகள் எனக் கண்டு அவற்றைத் தம்முடையவை எனக் கொண்டுள்ள பற்றினின்றும் நீங்குவது வீடாகும். இதுவே, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப், பற்றுக பற்றுவிடற்கு" (350) என்னும் செந்தமிழ் பொதுமறை பொருளுமாகும்.