ஐந்தாம் தந்திரம் இது நூற்று ஐம்பத்துநான்கு திருப்பாட்டுக்களைக் கொண்டது. சுத்த சைவ முதல் உட்சமயம் ஈறாகச் சொல்லப்படும் இருபது பிரிவுகளையுடையது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறம் என்றே கூறப்படும். அவ்வுண்மை 'ஆலின்கீழ் நால்வர்க்கன் றறமுரைத்த வங்கணனை' என்னும் சேக்கிழாரடிகள் திருமொழியான் உணரலாம். அறம் எனினும் வேதம் எனினும் ஒன்றே. அவ்வுண்மை நம்பிரான் மூலருளிய வேதத்தைவிட்ட அறம் இல்லை வேதத்தின், ஓதத் தகும் அறம் எல்லாம் உள' (61) என்னும் திருப்பாட்டான் உணரலாம். எனவே நான்கு தத்திரங்களினும் உறுதிப் பொருள் நான்காகிய அறத்தினை உரைத்தமையை ஒருபுடையொப்பாக விளக்கப்பட்டது. இனி அந் நான்கினும் மேலாகக் கருதப்படும் பேறு கூறியருளத் தொடங்குகின்றனர். பேறாவது செம்பொருட் செந்நெறியாம் சித்தாந்த சைவத்தினை மேற்கொள்வது. அந்நிலை வேதத்தொடர்பு முற்றிய பின் கைகூடுவதென்பது வரும் சிவஞான சித்தியார் திருவிருத்தத்தான் உணரலாம். "புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகல்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம அறத்துறைக ளவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றாற் சைவத் திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்." (8. 2 - 1.) உலகிடை நிலவும் சமயங்களை நான்காகப் பகுப்பர். அவை முறையே மெய்ப்பொருளாம் விழுமிய முழுமுதற் சிவபெருமானின் உண்மையுணராமை, அப் பொருளின் முதன்மை உணராமை, பேறுபெறும் நெறியுணராமை, பேற்றின் இயல்புணராமை என்பன. இந் நான்கனுள் முன்மூன்றனையும் புறப்புறம், புறம், அகப்புறம் என்னும் முக்கூற்றுப் புறச்சமயங்கள் என்ப. மற்றொன்றனை அகச் சமயம் என்ப. செம்பொருட்டுணிவாம் சித்தாந்த சைவம் சமயங்கடந்த பெருநெறி. அதுவே திருநெறி. இதனை வருமாறு நினைவுகூர்க: 'உண்டாமெய் ஓரார் உறு முதலோ ராரோர்ந்தும், அண்டார் பெறுநெறியன் னார்', 'உண்டாமெய் ஒண்முதல் ஓங்கு பெறுநெறியும், கண்டார் காணார்பேற் றியல்பு.'
|