பக்கம் எண் :

1297
 

பேறு என்பது திருவடிக்கலப்பு. கலப்பு என்பது மறவா இன்ப அன்பு நினைப்பு. அறமுதல் நான்கும் நால்வரருள் நான்மறையாகும். பேறு என்பது திருக்கோவையாராகும். பேற்றின் உறுதுணையே நம்பிரான் மூலரருளிய திருமந்திரமென்னும் செந்தமிழாகமமாகும். அப் பேற்றின் அடிப்படை இவ்வைந்தாந் தந்திரமாகும். சைவம் நால்வகை என்பதூஉம், தொண்டு நாற்பால தென்பதூஉம், அத்தொண்டர் தன்மையும், நால்வகை என்பதூஉம், அத்தொண்டர்பெறும் பேறுகளும் நான்மையவென்பதூஉம், அத் தொண்டர்களின் செவ்விநிலைகளும் நான்கென்பதூஉம், புறச்சமயப் புன்மையும், ஒழுக்கவுறுதியும், அன்பகநெறியும் முறையே ஒன்றன்பின்னொன்றாக அடைவுபட இதன்கண் அருளிச் செய்துள்ளனர்.

ஆறாம் தந்திரம்

ஐந்தாம் தந்திரத்தில் கூறியபடி பேற்றின் அடிப்படையாம் சிவனெறியை மேற்கோடல் பெறுவார்க்கு உறுதுணையாய் எழுந்தருளிவந்து அருளுபவர் சிவகுருவாவர். அதனால் அப் பேறு வரும்வழி வகுத்தருள்வதாயிற்று. இது, நூற்றிருபத்தெட்டுத் திருப்பாட்டுக்களையுடையது சிவகுரு தெரிசனமுதல் பக்குவன் ஈறாகப் பதினான்கு பகுப்புக்களையுடையது. சிவகுருத்தோற்றம் என்பது சிவபெருமான் ஐம்புலவேடரிற் பட்டுழலும் ஆருயிர்களைச் செவ்விநோக்கி மீட்பான் எழுந்தருள்வன் என்பதாம். அங்ஙனம் எழுந்தருளுங்கால் செவ்விபெற்ற நல்லாரை இவர்தந்தூர்தலாகிய அதிட்டித்தலைப்புரிந்து மேறகொண்டருள்வன். செவ்வி வரத் துணை புரிந்தருள்பவனும் அவனே. இது, செஞ்சாலிச் சோறமைப்பார் குழிசியும், நீரும், அரிசியும், தீயும், விறகும் சேர்த்துச் சமைப்பர். அங்ஙனம் செய்வார் தாமே சோற்றின் பதமும் நோக்குவர். பதமாகிவிட்டதெனவுங் கூறுவர். ஆனால் அவ்வரிசி தானாகப் பதமாகவில்லை; பதமாக்கப்பட்டது. அப்படியிருந்தும் அரிசி பதமாகிவிட்டது எனக் கூறுவதனையொக்கும்.

குருவே சிவன் என்பது (1566) விளங்கவே அச் சிவனால் உணர்த்தப்படுவது திருவடிப்பேறாகும். இதனை 1571-ஆம் திருப்பாட்டான் உணரலாம். திருவடிப்பேற்றால் காண்பான் காட்சி காணப்படும் பொருள் விளக்கமுறும். இவ்வுண்மை 'காணாத' (1584) என்னும் திருப்பாட்டான் விளங்கும். சிவபெருமானை மறவாமை (1558) யேதுறவாகும். அது மும்பொருள் விளக்கத்தால் அமைவதாகும். அம் மறவாத் துறவினரே சிவனைப் பேணும் இறவாத் (1599) தவம் பெற்றோராவர். சித்தஞ் சிவமாவார் தவக்கடப்பினை (1617) உடையராவர். பள்ளியில் பிள்ளைகள் மேல் வகுப்புக்குச் செல்வதுபோன்று தவமுடையாரும் தவக்கடப்பு எய்துவர்.