முகவுரை 1. பாயிரம் "ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே." என்னும் சூத்திரப்படி ஒரு நூற்குப் பாயிரம் உரைப்பது நூன் முறையாகும். அம் முறைப்படி நாயனாரும் "தமிழ் மூவாயிரத்" துக்குப் பாயிரம் கூறியுள்ளார். மூவாயிரம் செய்யுட்களில் பாயிரச் செய்யுட்கள் சேர்ந்தனவே யாயினும், ஒன்பது தந்திரங்களுக்கும் அது பொது. நாயனார் கூறியது ஒன்பது தந்திரங்களே என்பது, "தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே." என்ற சிறப்புப் பாயிரப் பாசுரத்தால் விளங்கும். பாயிரம் பொது, சிறப்பு என இருவகைப்படும். நாயனார் கூறியது பொதுப்பாயிரம். அவர் மாணாக்கர்கள் கூறியது சிறப்புப் பாயிரம். தற்காலம் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கின்ற புத்தகங்களில் இவ் விரண்டினையும் வேறு பிரியாது அச்சிட்டிருக்கின்றனர் அதனால் படிக்கிறவர்களுக்கு எது நாயனார் பாடல் எது அவருடைய மாணாக்கர்களுடைய பாடல் என வேறு பிரித்து அறிவது கடினமாயிருக்கிறது. அக்குறையையும் ஒருவாறு கண்டு நீக்கியுள்ளேன். நாயனார் என்பது ஆகமங்களின் கருத்தைத்தான் ஒன்பது தந்திரங்களாகப் பாடினார் என்பது, "அந்தி மதிபுனை அரனடி நாடொறும் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே." என்னும் பாயிரச் செய்யுளால் விளங்கும்.
|