பக்கம் எண் :

1315
 

ஆகமங்கள் இருபத்தெட்டு ஆயிற்றே; நாயனார் ஒன்பது ஆக மங்களைப்பற்றி மாத்திரம் ஏன் கூறவேண்டும் என்பார்க்கு, சதாசிவநாயனார் வெளியிட்டது இருபத்தெட்டு ஆகமங்கள் என்றும், அவைகளில் நந்தி என்று பேர்பெற்ற சீகண்ட உருத்திரர்க்கே ஒன்பது ஆகமங்கள்தாம் கிட்டின என்றும், அவ்வொன்பது ஆகமங்களையே நந்தியெம்பெருமான் திருமூலர் முதலிய தம்முடைய எட்டுச் சீடர்களுக்கு அருளினார் என்றும், ஆகையால், இப் பூவுலகிற்குக் கிட்டினதே ஒன்பது ஆகமங்கள் தாம் என்றும், ஆதியில் கல்லால் நீழலிலும், மகேந்திர மலையிலும், திருப் புறம்பயத்திலும் ஒவ்வொரு காலங்களிலும் வெளியிடப்பட்ட ஆகமங்கள் எல்லாம் மறைந்துபோகவே இறைவனுடைய ஆணையால் அவ்வொன்பது ஆகமங்களின் கருத்துக்களை ஒன்பது தந்திரங்களாக நம் நாயனார் பாடி உலகர்க்கு உபகரித்து உள்ளார் என்றும் அடியில் காட்டப்படும் அவருடைய பாசுரங்களால் வெளியாம்.

ஆகமங்கள் இருபத்தெட்டு என்பது

"அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்."

என்பதால் அறியலாம்.

ஒன்பது ஆகமங்கள் தாம் சீகண்டர் பெற்றார் என்பது

"சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே."

என்னும் பாசுரத்தால் அறியலாம்.

அவ்வாகமங்கள் இன்னவென்பது

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே."

என்னும் பாசுரத்தால் விளக்கமாம்.

ஆதலின் முதற்றந்திரம் காரண ஆகமத்தின் சாரமாகவும், இரண்டாம் தந்திரம் காமிக ஆகமத்தின் சாரமாகவும்., மூன்றாம் தந்திரம் வீர ஆகமத்தின் சாரமாகவும், நான்காம் தந்திரம் சிந்தியாகமத்தின் சாரமாகவும், ஐந்தாம் தந்திரம் வாதுள ஆகமத்தின் சாரமாகவும், ஆறாம் தந்திரம் வியாமள ஆகமத்தின் சாரமாகவும், ஏழாம் தந்திரம் காலோத்தர ஆகமத்தின் 
சாரமாகவும், எட்டாம் தந்திரம் சுப்பிரபேத ஆகமத்தின் சாரமாகவும், ஒன்பதாம் தந்திரம் மகுட ஆகமத்தின் சாரமாகவும் அமைந்திருப்பது விளங்கும்.