பக்கம் எண் :

1316
 

சதாசிவ மூர்த்தியானவர் இருபத்தெட்டு ஆகமங்களையும் பிரணவர் முதலிய பதின்மருக்கும். மகாஉருத்திரர் முதலிய பதினெண்மருக்கும் ஒரோவொன்று ஒவ்வொருவருக்கும் அருளிச் செய்தார். இதனை,

"எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டனர்."

என்ற பாயிரச் செய்யுளால் அறியலாம்.

ஆனால் ஒன்பது ஆகமங்களையும் ஒருங்கே பெற்றவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரர்களில் முதல்வராகிய சீகண்ட உருத்திரர் ஆவர். அவரைத்தான் "சிவமாம் பரத்தினில்" என்ற பாசுரத்தில் நாயனார் "நந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது தந்திரங்களிலும் நாயனார் விளக்கியுள்ளவை எவை என்பது,

"ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே."

என்னும் பாசுரத்தால் விளங்கும்.

நாயனர் திருமந்திரப் பாட்டுக்களைத் தமிழ் மொழியிலேயே தான் பாடினார் என்பது,

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே."

என்ற நாயனார் வாக்காலும்,

"மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்."

என்ற அவர் மாணாக்கர் வாக்காலும்,

"ஒன்றவன்றான்" என எடுத்து நாயனார் திருமந்திரத்தைத் தொடங்கினார் எனச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் கூறுமாற்றாலும் அறியலாகும்.