என்ற பாசுரங்களினால் உடல் அழியாமல் இருக்கும் வழியைத் தான் தெரிந்து உடம்பை அழியாமல் காப்பாற்றினதாகவும், ஏனையோர்களும் அப்படிச் செய்தால் உடல் அழியாது என்றும் கூறுவதை நோக்க விளங்கும். ஆகையால் நாயனார் மூவாயிர ஆண்டும் அதற்கு மேலும் இருந்ததைப்பற்றி யாரும் சந்தேகம் கொள்ள நியாயம் இல்லை. நாயனார் நந்தி என்று சொல்லப்படுகின்ற சீகண்டருடைய எட்டு மாணவர்களில் ஒருவர். சனகர் - சனந்தனர் - சனாதனர் - சனற்குமாரர் - சிவயோக மாமுனி - பதஞ்சலி - வியாக்கிரமர் - திருமூலர் ஆகிய எண்மரும் நந்தி அருள் பெற்ற நாதர் ஆவார்கள். நாதர் : தத்திதாந்த நாமம். நாதர் என்ற மொழிக்கு 'நந்தி அருள் பெற்றவர்' என்பது பொருள். இவ்வெண்மரும் தாங்கள் கேட்ட உண்மையை உலகில் மடங்கள் தாபித்துச் சீடர்களைச் சேர்த்துப் பக்குவ ஆன்மாக்களிடத்துப் பரப்பி வந்தார்கள். சனற்குமாரருடையசீடர் சத்தியஞானதரிசினிகள் ஆவர். அவருடைய சீடர் பரஞ்சோதி முனிவர் அவர் சீடர் மெய்கண்டார். அவருடைய பரம்பரையில் ஏற்பட்ட மடங்கள்தாம் திருவாவடுதுறை தருமபுரம் முதலியவை. பதஞ்சலி - வியாக்கிரமர் இருவரும் வடதேசத்தில் மடங்கள் தாபித்தது போலவே சிதம்பரத்திலும் தாபித்துத் தங்கொள்கைகளைப் பரப்பி வந்ததோடு சிதம்பரத்திலேயே நடனதரிசனம் செய்து சிவத்துடன் கலந்தார் என்றும் அறிகிறோம். சிவயோகமாமுனி என்றாலும் சிவமுனிசித்தசன் என்றாலும் ஒன்றே. அவரும் தென்னாட்டில் பல சித்தர்களுக்குப் போதித்துப் பல மடங்கள் தாபித்துள்ளார். திருமூலரும் திருஆவடுதுறையில். அமர்ந்து 'மூவாயிரந் தமிழ்' என்ற திருமந்திர நூலைச் செய்து முடித்து, தம்முடைய ஏழு சீடர்களுக்கும் போதித்து அவர்கள் மூலமாக ஆகமங்களின் கருத்துக்களை உலகில் பரவச் செய்தார். அவ்வேழு சீடர்களும் ஏழு மடங்கள் தாபித்துத் தம்முடைய சீடர்களுக்குப் போதித்து வந்தார்கள். காலாங்கர் என்பதும், காலங்கி கஞ்சமலையன் என்பதும், காலங்கிகஞ்சன் மலையமான் என்பதும் ஒருவரையே குறிக்கும். காலாங்கர் என்பவர் மலை மன்னர் என்று சொல்லப்படும் உடையார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் கஞ்சமலை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், அவரைக் கஞ்சமலைச் சித்தர் என்று சொல்வதும் உண்டென்றும் அறிகிறோம். கஞ்சமலை என்னும் ஊரை இப்போது சித்தர்கோயில் என்று வழங்குகிறார்கள்.
|