பக்கம் எண் :

1320
 

நாயனார் தம் திருமந்திர நூலை ஏழு சீடர்களுக்கும் ஒரே தடவையாகக் கூறவில்லை என்றும், இரண்டு தடவையில் கூறினார் என்றும், முதல் தடவையில் சோமன் - பிரமன் - உருத்திரன் ஆகிய மூவர்க்கும், இரண்டாந் தடவையில் ஏனைய நால்வர்க்கும் கூறினார் என்றும்,

"மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்."

என்னும் பாசுரத்தால் அறிகிறோம்.

நாயனார் முதலில் கூறிய ஐங்கரன் வாழ்த்தும், கடைசியில் கூறிய "வாழ்கவே வாழ்க" என்னும் வாழ்த்துச் செய்யுளும் நூலில் சேரா.

"ஒன்றவன்றானே" என்ற செய்யுள் முதற்கொண்டு கூறிய பரசிவப் பெருமை 50 செய்யுட்களும்; மும்மூர்த்திகளின் முறைமை 10 செய்யுட்களும்; வேதச் சிறப்பு - 7்; ஆகமச் சிறப்பு - 7; அந்தணர் ஒழுக்கம் - 10; அக்கினி காரியம் - 10; அரசனது ஆட்சிமுறைமை - 10; வான் சிறப்பு - 2; அறம்செய்வான் திறம் - 10; அறம் செயான் திறம் - 10; அவையடக்கம் - 2 ஆகச் செய்யுட்கள் 68-ம் மொத்தச் செய்யுட்கள் 128 -ம் பாயிரமாகும். இப் பாயிரத்தில் தொல்காப்பியப்படி அறுவகை வாழ்த்தும் அடங்கியுள்ள தன்மை கண்டு கொள்க.

குரு பாரம்பரியம் - நாயனார் தம் வரலாறு கூறல் முதலியன நாயனார் தம் சீடர்களுக்கு வரன்முறை தெரியவேண்டிக் கூறியவை; ஆதலால் நூலிற் சேரா.

குருமட வரலாறு - திருமந்திரத் தொகைச் சிறப்பு முதலியன மாணாக்கர்கள் ஓதியவை யாதலால் நூலில் சேரா.

இவை யிரண்டினையும் நூலுக்குத் தற்சிறப்புப் பாயிரமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் கொள்ளுதல் பொருத்தம்.

அக்காலத்திய இலக்கண நூன் முறைப்படி அறுவகை வாழ்த்துக்களும் பாயிரத்தில் அடங்கும்.

சில படிகளில் பாயிரத்தில் இருக்கவேண்டிய அந்தணர் ஒழுககம் அக்கினி காரியம் - அறம் செய்வான் திறம் - அறம் செயான் திறம் - அரசனது ஆட்சி முறைமை - வான் சிறப்பு முதலியன முதற் றந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஓலைச் சுவடிகள் கோப்பார் கைப்பிசகு ஆகும்.