யான் உணரலாம். தத்துவ உண்மையினை உணர்வதால் காணப்படும் பொருள்கைனைத்தும் நிலைக்குமென இருட்சார்பால் எண்ணும் மருள் நீங்கும். நீங்கவே எனது எனப்படும் உலகுடற் பற்று அறும். அறவே ஆருயிர்கட்கு என்றும் புகலிடமாம் அருள் துணையால் தம் நிலை தோன்றும் தோன்றவே தானாகி நிற்கும். நிற்கவே நிலையாப் பொருள்களை விரும்பிச் செய்யும் வேள்வி முதலிய பொய்த்தவம் நீக்கப்படும். அது நீங்கவே நிலையாத பொய்ப்போகமும் கழியும். திருவடியின்பமாகிய மெய்ப்போகத்துட் செல்லும் உண்மையான திருவடியுணர்வாம் திருவருள் நினைவில் தங்குதலே மெய்யுலக நுகர்வாம். அதனை நுகர்ந்து பேரின்பப் பெருவாழ்வினைக் கைகூடச் செய்யும் நிலை ஏற்படும். இவை அனைத்தும் சிவானந்தத் தேறல் பருகுவதால் ஏற்படுவன. உண்டுவிட்டு: தோன்றாமலடங்கச் செய்து என்பதும் ஒன்று. (அ. சி.) தத்துவம் - 96 தத்துவங்கள். (11) 322. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.1 (ப. இ.) அருளால் அகத்தவம் புரியும் யோகிகள் காலாகிய உயிர்ப்பினை நடுநாடி வழியாகச் செலுத்திப் புருவ நடுவாகிய மதிமண்டலத்திற்கு ஏற்றுவர். ஏற்றி ஆங்குத் தோன்றும் இயற்கை உண்மை அறிவு இன்பமாகிய திருவடியுணர்வமிழ்தை நுகர்வர். அங்ஙனம் நுகர்ந்தவர் சிவபெருமானது எண்குணச் சித்தியும் எய்துவர். எய்துவர் என்பது அவாய் நிலையான். வந்தது. அறிவழி கள்ளினை உண்டு பின்னும் உண்ணப் பெருவேட்கை கொண்டு உண்டுண்டு உழலும் மோகியர் மூடராவர். மோகம் பெருகிய மதத்தால் அறிவழிந்தவராவர். (அ. சி.) கால்கட்டி - பிராணவாயுவை அடக்கி. போத அமுது - ஞான அமுது. ஆறு மதத்தார் - அறு சமயத்தவர். (12) முதல் தந்திரம் முற்றும்.
1. தள்ளுண்ணாப். திருக்குறள், 930.
|