பக்கம் எண் :

145
 

இரண்டாம் தந்திரம்
[காமிகாகமம்]
1. அகத்தியம்

323. நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய1 நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

(ப. இ.) பெரும்பூதம் ஐந்தினும் நடுவாக வுள்ளது தீ. அத் தீயின் நடுவுள் அதற்கு ஒளியும் சூடும் ஈந்து விளங்கிக் கொண்டிருப்பவன் சிவபெருமான். அவன் 'அவ்வெரியினை உருவருக்கங்களில்' ஒன்றாகக் கொள்பவன். அதனால் விண்ணவர் ஒருங்கு திரண்டு சிவபெருமான்பாற் சென்று "தீயின் நடுவுள் விளங்கும் ஆண்டவனே! உலகம் தென்பாலுயர்ந்து வடபால் தாழ்ந்து நடுவிழந்து நிற்கின்றது, காத்தருள வேண்டும்," என்று வேண்டினர். சிவபெருமான் அவ் வேண்டுகோளைத் திருச்செவி ஏற்றுத் தக்க அகத்தியனை நோக்கி! அகத்தியனே "படிப்பினாலும் பண்பாட்டினாலும் உண்மை உயர்வைத் தென்னாடு எந்நாளும் எய்தி நிற்கின்றது. அத் தென்பால் நீ சென்று அவற்றை ஆய்ந்து கைக்கொண்டு முன்னுவாயாக" என்று அருளினன்.

இதற்கு வழங்கும் பழங்கதை வருமாறு: முன்னொரு காலத்துத் திருக்கைலாய மலையில் இறவாப் பிறவா நிலைசேர் சிவபெருமானுக்கும் அத்தகைய மலைமகளார்க்கும் திருமணம் நிகழ்ந்தது. அத் திருமணங்கண்டு பேறு பெறுதற்பொருட்டு விண்ணவரும் மண்ணவரும் ஒருங்கு கூடினர். அதனால் நிலவுலகம் தென்பால் உயர்ந்து வடபால் தாழ்ந்து தடுமாறலாயிற்று. அதுகண்டு விண்ணவர் நடுங்கினர். சிவபெருமான் அவ்விண்ணவரை நோக்கித் தென்பால் என்னை ஒப்பான் ஒருவன் சென்றால் வடபாலுள்ள தாழ்வு தீரும் என்றருளி அகத்தியனை அழைத்துப் போகக் கட்டளையிட்டருளினன். அகத்தியனும் அச் சிவபெருமானைப் பணிந்து வணங்கி எம்பெருமானே! 'தென்பாண்டி நாடே சிவலோகம்' ஆதலின் ஆண்டு வாழ்வார் உண்மையான் உன்னையுணர்த்துவதும், என்றும் உனக்கு உவப்பாயுள்ளதும், இருவழக்கினும்நின்று நிலவுவதும், இனிமையும் சுருக்கமும் தெளிவும் சிறப்பும் இயற்கையும் நயனும் ஒருங்கமைந்ததும் ஆகிய கன்னிச் செந்தமிழ் மொழியின் மன்னியபுலமை என்ப. அவர்களுடன் அளவளாவி உறவு பூண்டு உறைவதற்கு அறந்தவறாத்திறம் அமைந்த அத் தண்டமிழ் மொழியின் அமைதியினை அடியேற்கு அருளுதல் வேண்டுமென விண்ணப்பித்தனர். சிவபெருமானும் முதன்மையும் முன்மையும் நன்மையும் இயல்பாக அமைந்த நற்றமிழ் அமைதியினை அறிவுறுத்தருளி நண்ணுவித்தனன். இவ்வுண்மை வரும் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணச் செய்யுளான் உணர்க :


1. அன்றாலின். அப்பர், 6 . 50 - 3.

" மற்றவர்தா. 12. திருமூலர், 2.