பக்கம் எண் :

146
 

'விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் தேயம்
தொடைபெறு தமிழ்நா டென்று சொல்லுப அந்த நாட்டின்
இடைபயில் மனித்த ரெல்லாம் இன்றமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவ ரென்ப கேட்டார்க் குத்தரம் உரைத்தல் வேண்டும்.'

'சித்தமா சகல வந்தச் செந்தமிழ் இயல்நூல் தன்னை
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதனூல் தன்னை மற்றது தெளிந்த பின்னும்
நித்தனே அடியேன் என்று நின்னடி காண்பன் என்றான்.'

- திருவிளையாடல். கீரனுக்கு - 11, 12.

இப் பழங்கதை பெரியதோர் உண்மையினை நிலைநாட்டும் அரிய உருவகமாம். அது மும்மல காரியமாகிய முப்புர மெரித்தகதை உருவகம் போன்றாகும். திருமணக் காலத்தில் ஒன்று கூடினர் என்றமையால் வடபுலத்தார் ஐம்புலநுகர்வின் பொருட்டு ஒரோவழிச் சிவபெருமானை எண்ணுவது அவர்கள் இயல்பு என்பது புலனாகும். என்னை? திருமணம் ஒருவற்கு இடைவிடாது நிகழ்வது அன்மையான் என்க. மணம் என்பது மனம் பொருந்துவ தென்பதாகும். தென்பால் உயர்தல் என்பது என்றுமுள்ள தென்றமிழ்வாணர் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின்' என்னும் செந்தமிழ்த் திருமுறைநெறி வழுவாது ஒழுகும் செறிவினர். பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு கனவினும் நனவினும் வழுவாது வழிபடுவோர். சிவமணி திருவெண்ணீறு திருவைந்தெழுத்து மூன்றினையும் முறையே உடை உடல் உயிராகப் பூண்டு ஒழுகுபவர். சிவபெருமானுக்குத் தம்மை முழுதும் ஒப்புவித்தவர். அதற்குத் துணையாகிய செந்தமிழ்த் திருமறை திருமுறையாகிய வேதாகமங்களை ஓதுபவர் 'எம்பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே' என்று அஞ்சுபவர். இருள்முனைப்பு அற்றவர். அருள்முனைப்பு உற்றவர். பிறப்பற்றவர். சிறப்புற்றவர். பெருமையால் தம்மை ஒப்பவர். அனைத்துயிரையும் சிவத்தொடர்பால் பேணுதலால் சிவனைப் பெற்றவர். ஒருமை என்று சொல்லப்படும் சிவனினைவால் உலகை வென்றவர். வரும் பிறப்பற்றவர். அருமையாம் நிலையில் நிற்பவர். அன்பினால் இன்பமார்பவர். இம்மை உம்மையாகிய இருமையும் கடந்தவர். இவர்கள் உறையும் தென்திசை 'மாதவஞ் செய் தென்திசை' என்று சிறப்பித்துச் சொல்லப்படும். எங்கணும் சிவபெருமான் முதன்மைத் திருக்கோவிலே காணப்படும். அவனையே முழுமுதலாக உணர்த்தும் செந்தமிழ்த் திருமறை ஓதுதலே எங்கணும் காதில் விழுவதும் தீமையைக் காதுவதுமாகும். இன்னும் பல நலங்களும் உடையது தென்னாடு. அதனாலேயே 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் செந்தமிழ் மறை முடிவும் எழுவதாயிற்று. அதனையடுத்து 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என எழுந்தது அஃது அச் சிவபெருமானே எல்லா நாட்டவர்க்கும் இறைவன் என்னும் மாறா இயற்கை உண்மையை உணர்த்துகின்றது. 'சிவன்' என்பது இயற்கை உண்மை வண்மை இன்பச் சிறப்பு நிலையாகும். இறை என்பது அறமுறை செய்யும் சார்புப் பொது நிலையாகும். இதனால் தென்தமிழ்ச் சிவனெறியாளர் எல்லாவுலகினரையும் புறக்கணிக்காது சிறப்புச் செய்து இணைத்து ஒற்றுமை கொள்ளும் வெற்றியினர் என்பதும்