பக்கம் எண் :

241
 

மூன்றாம் தந்திரம்
[வீராகமம்]
1. அட்டாங்க யோகம்
(அகத்தவம் எட்டு)

531. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிறைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

(ப. இ.) விடுத்தலும் எடுத்ததும் தடுத்தலுமாகிய உயிர்ப்புப் பயிற்சியுடையார் பதினாறு விடுத்துப் பன்னிரண்டு உள்ளிழுக்கும் ஏனையார் போலன்றிப் பதினாறுமே உள்ளிழுக்கப் பழகிவிடுவர். அதன்மேல் விடுத்தலும் எடுத்தலுமின்றித் தடுத்தலாகவே நிற்பர். எண்பெரும் யோக முறைகளையும் எடுத்தியம்பிய நந்தி தீதகற்றலும் நன்றாற்றலும் ஆகிய செய்முறைகளை அறநெறியொழுக வகுத்தருளினன். விடுத்தல் - இரேசகம். எடுத்தல் - பூரகம். தடுத்தல் - கும்பகம். வற்கரி : வற்கம் - குதிரைக் கடிவாளம் முதலியன. அது வற்கரி என நின்று ஆகுபெயராய் உயிர்மூச்சைக் குறிக்கின்றது. இராசி - ஈண்டுப் பன்னிரண்டு என்னும் எண்ணுப்பெயர் விளக்கிநின்றது. இயமம் - தீதகற்றல். நியமம் - நன்றாற்றல்.

(அ. சி.) வற்கரி - மூச்சு. நிரைத்த இராசி -12. பிரைச்சதம் - யோகம்.

(1)

532. செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.

(ப. இ.) திருவருளால் இயமமாகிய தீதகற்றலும், நியமமாகிய நன்றாற்றலும் செய்து போந்தவர் நொசிப்பாகிய சமாதியை எய்துவர். திருவருள் உத்தரமாகிய பின்னும் பூருவமாகிய முன்னும் நடப்பாற்றல் வனப்பாற்றல்களாக மாறுதல் வேண்டும். அப்பொழுது 'சிவய நம' என நின்றது சிவயசிவ எனவரும். உறுப்புத் தொடுதற்குரிய திருமுறைத் திருப்பதிகம் 'திருவங்கமாலைத்' திருப்பதிகமாகும். சமாதி - நொசிப்பு . பராசத்தி - வனப்பாற்றலாகிய திருவருள். உத்தரம் - பின்பு; நடப்பாற்றல். பூருவம் - முதல்; நடப்பாற்றல் முன்னிலையாகிய வனப்பாற்றலாக மாறுதல். இஃது எவ்வாறெனின் சிவயநம என்பது சிவயசிவ எனக் கணித்தல். கவசம் - போர்வை. நியாசம் - (நெஞ்சு, தலை, குடுமி, கண், கை, கருவி என்னும் உறுப்புப் பொருள்களைச் சிவனுடைமை