என்று கருதித்) தொடுதல். இஃது இரண்டு வகை. ஒன்று உடம்பு. மற்றொன்று கை எனப்படும். அதனால் நியாசங்கள் எனக் கூறப்பட்டன. முத்திரை - கைவிரல்களால் பொருள் குறிக்கும் அடையாளங்கள். இந்நிலை இந்த முறைப்படி. (2) 533. அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே. (ப. இ.) அந்நெறி இந்நெறி என்று தடுமாறிக் கூறாது, அகத்தவமாகிய எட்டுறுப்புக் கொண்ட யோகநெறியே சென்று சமாதியாகிய நொசிப்பின்கண் நிலைபெற்று நில்லுங்கள். இத்தகைய நன்னெறிக்கண் செல்வார்க்கு ஞானமாகிய திருவடியுணர்வு எளிதினெய்தும். அத்தகையோர் ஊனடைந்த உடம்பிற் புகுதார். அந்நெறி இந்நெறி என்னாது - அகத்தவமாகிய யோகத்துக்கு வேறுபட்ட வழிகளைப் பயன்தருவன என்று கொள்ளாமல். நன்னெறி - நல்ல அகத்தவம். ஆகத்திற் போக்கில்லை - மீட்டும் ஓருடம்பிற் புகும் பிறப்பில்லை. (3) 534. இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (ப. இ.) தீதகற்றல், நன்றாற்றல், அளவிலா இருக்கை, வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, நினைதல், நொசிப்பு என்னும் வழிமுறைத் தவநிலை பயிலுதல் வேண்டும். இயமம் - தீதகற்றல். நியமம் - நன்றாற்றல். ஆதனம் - இருக்கை. பிராணாயாமம் - வளிநிலை. பிரத்தியாகாரம் - தொகை நிலை. தாரணை - பொறைநிலை. தியானம் - நினைதல். சமாதி - நொசிப்பு. (அ. சி.) அயமுறு - நல்வழிப்படுத்தும். (4)
|