(ப. இ.) ஆன் ஆகிய உயிருடன் கலக்கும் உச்சித்தொளைக்குமேல் சொல்லப்படும் அருளாணையாகிய நிலைக்களத்தினின்றும் மேனோக்கி எழுந்து விரியும் கதிர்கள் அறுபத்துநான்கு. ஓமொழி உருவாம் சிவ பெருமான் ஆனை எனப்படுவன். ஆன் + ஐ: உயிர்கள் தலைவன். அவன் அவ்வொளிகட்கு உள்ளொளியாக விளங்குவன். அச் சிவபெருமான் அவ்வொளிக் கதிர்களாகிய அறையில் வீற்றிருந்தருள்வன். சிவபெருமானும் மூலமுதலா எழுந்து அப்பால் வரையும் செல்லும் திருவருளாற்றலாகிய ஒலிக் கலையும் அவ்வொளிக் கதிர்களூடு தோன்றியருளும். ஒன்று முதல் நான்கு தந்திரங்களும் முறையே ஒரு புடையொப்பாக 'அறம் பொருள் இன்பம் வீடு' என்னும் நாற்பொருள்களும் ஓதுவனவாகும். நாற்பொருள்களே ஆலமர் செல்வன் அருளியதாகும். அவ்வுண்மை வரும் ஆளுடைய பிள்ளையார் அருளிய தென்றமிழ்மறையான் உணர்க: "சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல்லிதழி சழிந்த சென்னிச் சைவ வேடந் தாளிணைத் தைம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம் வீடு மொழிந்த வாயான் முக்கணாதி மேயதுமுது குன்றே." - 1. 53 - 6. சழிந்த - கங்கை முதலிய நாற்பொருளும் பொறுத்தமையால் சப்பளித்த. அழிந்த - செம்மை வாய்ந்த. தமிழ் நான்மறைகள் தொன்றுதொட்டே நம் தமிழகத்துப் பயின்று வந்த வாய்மை திருமறைக்காடு திருஓத்தூர் என்னும் தூயதமிழ்த் திருப்பெயர்களான் உணரலாம். தமிழ் நான்மறைகள் அனைவராலும் சிறப்புறப் பயின்று வந்தமையானும், இத்திருவூர்களில் நூலும் நூல் வல்லார்களும் மிக்கிருந்தமையானும் இவ்வூர்கள் முதன்மையாய் அத் திருப்பெயர்கள் எய்துவவாயின. அம் மறைகளிருந்த தடமுந்தெரிய வொண்ணாதபடி அழித்தவர் பேர்கொண்ட பார்ப்பார். அச் செந்தமிழ்த் திருமாமறையின் தொடர்பாயெழுந்த திருமுறைகளை அழிக்க மடிதற்று முற்படுவாரும் அவரே இந் நாற்பொருளும் அறம் என்னும் ஒரு சொல்லால் வழங்கப்படும் மேல்வரும் ஐந்து தந்திரங்களும் பேறு, பேற்று வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, மாறாவாழ்வு என்னும் 'சிவயசிவ' மந்திரப் பொருள் ஐந்தினையும் ஒருபுடை யொப்பாக உணர்த்துவனவாகும். இவ்வைம்பொருளும் அருள் என்னும் ஒரு சொல்லால் வழங்கப்பெறும். (அ. சி.) ஆனை - ஆன்மாவை. ஆணை - பிரணவ சொரூபியான சிவன். கோடு - சத்தி. (100) நான்காம் தந்திரம் முற்றும்.
|