பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை100

181.

படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென்(று)
இடறா தொழிதும்; எழு,நெஞ்ச மே;யெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய்,
உடல்தான் உளபயன் ஆவ;சொன் னேனிவ் வுலகினுள்ளே



இரப்பவரும் யாவர் எனின், முற்பிறப்பில் திருமேனியில் பால்போலும் நிறத்தையுடைய திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவரும், அது செய்யாது அதனை இகழ்ந்தவருமேயாவர்.

குறிப்புரை: 'சிவத் தொண்டு தூய இன்பங்களைத் தரும்' எனவும், 'அதனை இகழ்தல் இவ்வுலகில் வறுமைத் துன்பத் தைத் தரும்' எனவும் உறுதிப்படக் கூறுவார் இங்ஙனம் கூறினார். படிறர் - பொய்யர். பொய் நிலையாமையை நிலைத்ததாக உணர்ந்து, நிலைத்ததை நிலையாததாக இகழ்தல். ஏகாரம், தேற்றம், ஆளுதல் - பயன் கொள்ளுதல். அவை மந்தாகினி ஆடுதல் முதலியன. மந்தாகினி - கங்கை, அஃது இங்குச் சிவலோக கங்கையைக் குறித்தது. 'நந்தவனம்' என்பது நீண்டு வந்தது 'கெடாத வனம்' என்றலும் ஆம். 'இவ்வா றெல்லாம் வானகத்தை ஆள்பவர்' என இறுதிக்கண் கூறற்பாலது செய்யுள் நோக்கி முதலிற் கூறப்பட்டது.

181. பொழிப்புரை: "எள் விழுந்த இடத்தைத் தேடிக் கொண்டு, 'ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்' என்று அது பற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை 'வரையாது வழங்கும் வள்ளலே' எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி1 இரந்து, பிறிதொன்றற்கும் பயன்படாத உடலைப் பாதுகாத் தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற் படிகளில் ஏறி இடறுதல் நேராத படி அதனினின்றும் நீங்குவோம்; நெஞ்சமே. புறப்படு. 'எதற்கு' எனின், எரியின்கண் ஆடுபவனும், எம்பெருமானும் கடலில் பரந்து எழுந்த நஞ்சத்தை உண்ட வனும் ஆகிய அவனது திருவடிகளைப் பல்லாற்றானும் சார்வனவே, இவ்வுலகத்தில் கிடைத்ததாகிய இவ்வுடலில் உளவாம் பயன்களாகும். இதனை நான் உனக்குச் சொல்லி விட்டேன். (என்மேற் பழியில்லை).

குறிப்புரை: 'எனவே, அவற்றைச் சார்தற்கே புறப்படுக' என்பதாம். அவற்றைச் சாராதவர் நிலை முன்னைப் பாட்டில் கூறப்பட்டமையால், 'அந்நிலை நமக்கு வாராது ஒழிய முயல் வோம்' என்றபடி. படிறு - பொய். 'சொல்லி ஓம்பி' என இயையும். சொல்லுதல் அதன் காரியமாகிய இரத்தல். மேலும், ஓம்புதல் அதன் காரணமாகிய மேற்கொள்ளுதல் மேலும் நின்றன. தாயின - பரந்த.



1. திருமுறை - 7.34.8