உ குருபாதம் 26-வது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய ஆசியுரை என்னை நினைந்து அடிமைகொண்டு என்இடர்கொடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான் -நம்பியாண்டார் நம்பிகள் திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலாக நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை ஈறாக நாற்பது பிரபந்தங்களின் தொகுதியாக இத்திருமுறை விளங்குகிறது. பிரபந்தங்களின் பாடுபொருள் இப்பிரபந்தங்களில் முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானைப் போற்றிப்பாடியன இருபத்தைந்தாகும். முருகப்பெருமானின் புகழ்விரித்துப் போற்றுவது திருமுருகாற்றுப்படை. விநாயகரைப் போற்றிப் பாடியவை மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை, விநாயகர் திருஇரட்டைமணிமாலை என்ற மூன்று பிரபந்தங்களாகும். ஏனைப்பதினொரு பிரபந்தங்களும் இறைவன் திருவருள்பெற்ற திருத்தொண்டர்களின் சிறப்பை விரித்துரைப்பன. இவற்றுள் கண்ணப்பரைத் தனியே போற்றுவது இரண்டு பிரபந்தங்கள். திருஞான சம்பந்தரைப் போற்றுவன ஏழு பிரபந்தங்கள். திருநாவுக்கரசரைப் போற்றிப் பாடியது ஒன்று. திருத்தொண்டத் தொகையின் வகை நூலாய், திருத்தொண்டர்களின் வரலாற்றைச் சுருக்கமாக விளக்குவது திருத்தொண்டர் திருவந்தாதியாகும்.
|