யாழ்ப்பாணர் மரபில் வந்த பெண்ணைக்கொண்டு பண்ணமைக்கச் செய்து அவற்றை முதல் ஏழு திருமுறைகளாகவும், மணிவாசகர் அருளிய திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாந் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திருமந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலாக உள்ள பிரபந்தங்களின் தொகுப்பைப் பதினொன்றாம் திருமுறையாகவும், வகுத்தருளியவர் நம்பியாண்டார் நம்பிகளாவார். அம்மன்னன் வேண்டுகோட்படி பதினொன்றாம் திருமுறையில் தாம் அருளிய பத்துப் பிரபந்தங்களையும் இணைத்து வகை செய்த பெருமைக்குரியவர் நம்பியாண்டார் நம்பிகளேயாவார். திருமுறைப் பகுப்பின் காலம் இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னன் அபயகுலசேகரன் என்ற சோழமன்னன் ஆவான் எனத் திருமுறைகண்டபுராணம் குறிப்பிடுகிறது. இப்பெயர் இயற்பெயரன்று, பட்டப்பெயராகும். இப் பெயருடைய மன்னன் முதல் இராஜராஜசோழன் ஆவான் எனப் பலரும் கருதுகின்றனர். இம் மன்னனின் காலம் கி.பி. 985-1014. எனவே நம்பியாண்டார் நம்பிகளின் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதியும் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகலாம். * * * திருமுகம் இறைவனும் சமயச்சான்றோர்களும் தம் சீடர்கட்கும் பக்தர்கட்கும் எழுதுவது திருமுகம் எனப்பெறும். சீடர்களும், பக்தர்களும் இறைவனுக்கும் பெரியோர்கட்கும் எழுதித் தெரிவிப்பது விண்ணப்பம் எனப்பெறும். “பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்” என்பது அப்பர் அருள்வாக்கு. ஒருவர் எழுதும் கடிதத்தைக் காணும்போது எழுதியவரின் முகம் நம் கண் முன்னால் காட்சியளிக்கிறது. அதனால்தான் அதனைத் திருமுகம் என்றனர். திருமுகத்தைக் கண்டால் அவர்தம் உணர்வெல்லாம் காண்போர்க்கு நன்கு புலனாகும். இது குறித்தே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றனர். இறைவன் அடியவர்கட்காக எழுதிய திருமுகம் இரண்டு. ஒன்று ஆலவாயில் மன்னிய சிவன்சேரமன்னராகிய
|